சீதையம்மன் ஆலய வளாகத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்த தீர்மானம்

நுவரெலியா சீத்தாஎலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலய வளாகத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தும் தீர்மானமொன்று நுவரெலியா பிரதேச சபையில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.

நுவரெலியா பிரதேசசபையின் இம்மாதத்திற்கான மாதாந்த கூட்டம் நேற்று முன்தினம் (8) வியாழக்கிழமை பிற்பகல் நுவரெலியா பிரதேசசபையின் தவிசாளர் வேலுயோகராஜா தலைமையில் நானுஓயாவிலுள்ள பிரதேசசபை காரியாலயத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு இரண்டு உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை. 21 உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர். இக்கூட்டத்தில் நுவரெலியா பிரதேசசபை எல்லைக்குட்பட்ட சரித்திர முக்கியத்துவம் பெற்ற நுவரெலியா சீத்தாஎலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்த தீர்மானமொன்றை தவிசாளர் வேலு யோகராஜா முன்வைத்தார். இந்த தீர்மானத்தை ஆளுங்கட்சி உறுப்பினர் எம். இராமஜெயம் வழி மொழிந்தார். இந்த தீர்மானம் எந்தவித எதிர்ப்புமின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானம் தொடர்பாக தவிசாளர் வேலுயோகராஜா கருத்து தெரிவிக்கையில், நுவரெலியா வெலிமட வீதியில் நுவரெலியா நகரத்திலிருந்து 6 கிலோமீற்றர் தூரத்திலுள்ள சீத்தாஎலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்திற்கு பெருந்திரளான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் சீதையம்மன் பக்தர்களும் வருகை தருகின்றனர். இந்த ஆலயத்தின் புனிதத்தை பாதுகாப்பதற்காக ஆலய வளாகத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம். இந்த தீர்மானத்தை மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகேவிடம் சமர்பித்து அவர் மூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும் அறிவித்து வர்த்தமானியில் பிரசுரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles