இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ண போட்டிகளில் ஆடும் அணிகள் குழுநிலையாக பிரிக்கப்பட்டிருக்கும் விபரத்தை ஆசிய கிரிக்கெட் கெளன்ஸில் நேற்று (05) வெளியிட்டது.
இதில் இலங்கை அணி பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் உள்ள குழுவில் இடம்பெற்றிருப்பதோடு இந்தியா மற்றும் பாகிஸ்தான் உடன் தொடருக்கு தகுதி பெறும் அணி மற்றக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளது.
எனினும் 2023 ஆசியக் கிண்ணப் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் பற்றி எந்த விபரமும் இந்த அறிவிப்பில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டிகள் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தபோதும் தொடரை பொது இடத்திற்கு மாற்றும் பேச்சுகள் இடம்பெற்று வரும் நிலையில் அதனையொட்டி சர்ச்சை நீடித்து வருகிறது.
இதில் மொத்தம் 13 போட்டிகள் நடைபெறவுள்ளதோடு குழு நிலை, சுப்பர் 4 மற்றும் இறுதிப் போட்டிகளான ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
கடந்த ஆண்டில் டி20 வடிவத்தில் நடந்த ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை நடப்புச் சம்பியனாக இருக்கும் நிலையில் அடுத்த ஆசியக் கிண்ணத் தொடர் ஒருநாள் வடிவத்திலேயே நடைபெறவுள்ளது. இதேவேளை 19 வயதின் கீழ் ஆசியக் கிண்ணத்தொடர் டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளதுடன், இதற்கான குழு விபரமும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் குழு ஒன்றில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுடன், தகுதிபெறும் இரண்டு அணிகள் இடம்பெறவுள்ளன. குழு இரண்டில் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிபெறும் அணிகள் இடம்பெறவுள்ளன.
