இலங்கை உலகக் கிண்ணத்திற்கு நேரடி தகுதி பெறுவதில் நெருக்கடி

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றியீட்டி மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை 2–0 என கைபற்றிய தென்னாபிரிக்க அணி உலகக் கிண்ண சுப்பர் லீக் புள்ளிப்பட்டியலில் இலங்கையை பின்தள்ளி 9ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

இதன்மூலம் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ண போட்டியில் இலங்கை அணி நேரடி தகுதி பெறுவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

உலகக் கிண்ண சுப்பர் லீக் புள்ளிப்பட்டியலில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகளே உலகக் கிண்ணத்திற்கு நேரடித் தகுதி பெறும். இலங்கை அணி தற்போது புள்ளிப்பட்டியலில் 77 புள்ளிகளுடன் 10ஆவது இடத்தில் இருப்பதோடு தென்னாபிரிக்க அணி 79 புள்ளிகளுடன் 10 ஆவது இடத்தில் காணப்படுகிறது.

இங்கிலாந்துக்கு எதிராக பிளம்பொன்டைனில் கடந்த ஞாயிறன்று (29) இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 343 ஓட்ட வெற்றி இலக்கை துரத்தி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டிய தென்னாபிரிக்க அணிக்கு உலகக் கிண்ண சுப்பர் லீக் போட்டி அட்டவணையில் மேலும் 3 போட்டிகள் எஞ்சியுள்ளன.

நாளை (01) நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி தவிர, வரும் மார்ச், ஏப்ரலில் நெதர்லாந்துடன் இரண்டு ஒருநாள் போட்டிகள் எஞ்சியுள்ளன. இந்த மூன்று போட்டிகளிலும் தென்னாபிரிக்கா வெற்றியீட்டினால் தென்னாபிரிக்காவின் புள்ளிகள் 107 ஆக அதிகரிப்பதோடு, அது உலகக் கிண்ண சுப்பர் லீக் புள்ளிப்பட்டியலில் மேற்கிந்திய தீவுகளை பின்தள்ளி எட்டாவது இடத்திற்கு முன்னேறும்.

இவ்வாறு நிகழ்ந்தால், இலங்கை அணி உலகக் கிண்ணத்திற்கு நேரடி தகுதி பெறும் வாய்ப்பு பறிபோகும் என்பதோடு வரும் ஜூனில் சிம்பாப்வேயில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் ஆட வேண்டி ஏற்படும்.

உலகக் கிண்ண சுப்பர் லீக் அட்டவணையில் இலங்கை அணி வரும் மார்ச் மாதத்தில் நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகளில் ஆடவுள்ளது.

அந்த மூன்று போட்டிகளிலும் வெற்றியீட்டினாலும் இலங்கை அணியால் மொத்தம் 107 புள்ளிகளையே பெற முடியும்.

இந்நிலையில் இலங்கை அணி உலகக் கிண்ணத்திற்கு நேரடி தகுதி பெறும் எதிர்பார்ப்பை தக்கவைத்துக்கொள்ள தென்னாபிரிக்காவின் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளில் ஒன்றிலேனும் அந்த அணி தோல்வியை சந்திப்பது அவசியமாகும்.

இதில் மேற்கிந்திய தீவுகள் அணி 88 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் இருந்தபோதும் அந்த அணிக்கு உலகக் கிண்ண சுப்பர் லீக் போட்டி அட்டவணையில் தொடர்ந்து எந்தப் போட்டியும் இல்லாததால் அந்த அணியால் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முன்னேற முடியாது.

இதனால் புள்ளிப்பட்டியலில் நேரடி தகுதி பெறுவதற்கான எட்டாவது இடத்தை பிடிப்பதற்காக இலங்கை மற்றும் தென்னாபிரிக்காவுடன் அயர்லாந்தும் போட்டியில் உள்ளது. அயர்லாந்து அணி தற்போதும் புள்ளிப் பட்டியலில் 68 புள்ளிகளுடன் 11 ஆவது இடத்தில் உள்ளது.

இதில் உலகக் கிண்ணப் போட்டியை நடத்தும் இந்தியாவுடன் உலகக் கிண்ண சுப்பர் லீக் புள்ளிப் பட்டியலில் முதல் ஏழு இடங்களில் இருக்கும் நியூசிலாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகள் ஏற்கனவே உலகக் கிண்ணத்திற்கு நேரடி தகுதி பெற்றுள்ளன.

இவ்வாறு நேரடித் தகுதி பெறாத உலகக் கிண்ண சுப்பர் லீக் புள்ளிப்பட்டியலில் கடைசி ஐந்து இடங்களில் இருக்கும் அணிகள், உலகக் கிண்ண லீக் 2இல் முதல் மூன்று இடங்களில் இருக்கும் அணிகள் மற்றும் தகுதிகாண் சுற்றின் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சிம்பாப்வேயில் நடைபெறும் தகுதிகாண் போட்டிகளில் ஆடவுள்ளன.

பத்து அணிகள் பங்கேற்கும் இந்த தகுதிகாண் சுற்றுப் போட்டியில் இருந்து இரு அணிகளே உலகக் கிண்ணத்திற்கு முன்னேறும்.

Related Articles

Latest Articles