சிரியாவில் இஸ்லாமிய அரசு குழுவின் (ஐ.எஸ்) தலைவர் என சந்தேகிக்கப்படும் அபூ ஹுஸைன் அல் குரைசியை துருக்கிப் படை கொன்றதாக துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ் குழுவின் முன்னாள் தலைவர் அண்மையில் கொல்லப்பட்ட நிலையிலேயே அவரைத் தொடர்ந்து வந்தவரும் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
துருக்கி உளவுப் பிரிவால் கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஒன்றிலேயே ஐ.எஸ் தலைவரை செயலிழக்கச் செய்ய முடிந்ததாக எர்துவான் டீ.ஆர்.டீ துர்க் தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார்.
எனினும் இது தொடர்பில் ஐ.எஸ் தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
துருக்கி எல்லைக்கு நெருக்கமாக உள்ள வடக்கு நகரான ஜன்தரிஸிலேயே இந்த நடவடிக்கை இடம்பெற்றிருப்பதாக சிரிய தரப்புகளை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த நவம்பரில் ஐ.எஸ் தலைவர் அபூ அல் ஹசன் அல் ஹஷ்மி அல் குரைசி மரணித்த அறிவிப்பை அந்தக் குழு வெளியிட்டது. 2022 ஒக்டோபர் நடுப்பகுதியில் தென்மேற்கு சிரியாவில் சுயாதீன சிரிய இராணுவ கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலிலேயே அவர் கொல்லப்பட்டிருப்பதாக அமெரிக்கா குறிப்பிட்டது.
வட கிழக்கு சிரியாவில் இருந்து வடக்கு ஈராக் வரை நீண்ட 88,000 கிலோமீற்றர் நிலப்பகுதியை முன்னர் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஐ.எஸ் குழு தமது அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாழ்ந்த சுமார் எட்டு மில்லியன் மக்கள் மீது கொடிய சட்டங்களை செயற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.










