இம்ரான் கானுக்கு வெளிநாடு செல்லத் தடை!

பாகிஸ்தானை விட்டு வெளியேற அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 9 மற்றும் 10ஆம் திகதிகளில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, இம்ரானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாப் கட்சியைச் சேர்ந்த நூற்றுக் கணக்கானோரை வெளிநாட்டுப் பயணத் தடைப் பட்டியலில் அரசு சேர்த்துள்ளது. இதில் இம்ரான் கானும், அவரது மனைவி புஷ்ராவும் அடங்குவர் என்று பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“ஒவ்வொரு வழக்கினதும் நிலையான நடைமுறையாக இது உள்ளது. நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு முகம்கொடுக்கும் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற தடை செய்யப்படுகின்றனர்” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தன் மீது பயணத் தடை விதித்ததற்காக அவர் நேற்று அரசுக்கு நன்றி தெரிவித்தார்். “நாட்டுக்கு வெளியில் எனக்கு எந்த சொத்தும் அல்லது எந்த வர்த்தகமும் அல்லது வங்கிக் கணக்கு கூட இல்லாத நிலையில் வெளிநாடு செல்ல எனக்குத் திட்டமில்லை” என்று இம்ரான் கான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தனது பிரதமர் பதவியை இம்ரான் கான் இழந்தார்.

அதன் பின், நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் இம்ரான் கான் மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles