நுவரெலியா கல்வி வலயத்தின் கோட்டம் 3ல் அமைந்துள்ள தங்கக்கலை இல 2 தமிழ் வித்தியாலயமே இது.
இப் பாடசாலையானது 1932 ம் ஆண்டு 20*12 சதுர அடி பரப்பளவில் ஆரம்பிக்கப்பட்ட அதே கட்டிடத்திலேயே இன்றும் இயங்கிக் கொண்டிருக்கின்றது.
61 மாணவர்கள் கல்வி கற்பதோடு 5 ஆசிரியர்கள் சேவையாற்றுகின்றனர். பிரிக்கப்பட்ட தனியான வகுப்பறைகள் இல்லை. ஒரு திறந்த மண்டபத்திலேயே தரம் 1 தொடக்கம் 5 வரையான வகுப்புக்கள். இயங்குகின்றன.
இடைவேளையின்போது விளையாடுவதற்கு மாணவர்களுக்கு விளையாட்டு முற்றம் இல்லை பாடசாலையை ஊடருத்து செல்லும் வீதியிலேயே காலைக்கூட்டம் நடைபெறும். மேலும் லயன் குடியிருப்பை ஒட்டியதாக பாடசாலை அமைந்துள்ளதால் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் சவால் மிக்கதாகவுள்ளது.
இவ்வாறான சூழலில் பாடசாலை சிறப்பாக இயங்குகின்றமைக்கு சான்றாக 2019,2020,2021 ஆகிய வருடங்களில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தொடர்ச்சியாக தலா ஒவ்வொரு மாணவர் சித்தி பெற்றுள்ளதோடு 2022ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் இரண்டு மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தி பெற்றுள்ளதோடு பாடசாலையின் அடைவு மட்டமானது 94 சதவீதமாக உள்ளது. மேலும் 2020 தொடக்கம் 2023 வரையான 4 வருட காலப்பகுதியில் சதுரங்க போட்டியில் மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார்.
2019ம் ஆண்டு ஆங்கில தின போட்டியில் மாணவனொருவர் தேசிய மட்டத்திற்கு தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஒரு பாடசாலைக்கு கட்டிட வசதி செய்து தரப்படும் பட்சத்தில் பாடசாலை மேலும் பல சாதனைகள் புரியும் என்பது பாடசாலை சமுகத்தின் கருத்தாகும்.










