” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இந்நாட்டுக்கு முகவரி தேடி தந்தவர்கள் (சிலோன் டீ என்ற நாமம்). ஆனால் முகவரியற்ற சமூகமாகவே அவர்கள் இன்னும் வாழ வேண்டிய அவல நிலை நீடிக்கின்றது. இவ்வாறு ஒரு சமூகம் முகவரி அற்று கிடக்கும்போது, அந்த சமூகத்தில் உள்ள ஒரு தலைவருக்கு முத்திரை வெளியிட்டு நினைவுகூரல் செய்வது வெட்கக்கேடான விடயமாகும்.”
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” தேசத்துக்கு முகவரி தேடிதந்த எமது மக்கள் முகவரி அற்றவர்களாக வாழ்கின்றனர். அவர்களுக்கு ஆவணங்களை அனுப்புவதாக இருந்தால்கூட சொந்த முகவரி இல்லை. இத்தகைய சமூகத்துக்கு தலைவராக இருந்தவரை கௌரவிக்கும் வகையில் முத்திரை வெளியிடுகின்றனர்.
இவ்வாறு ஒரு சமூகம் முகவரி இன்றி திண்டாடும் நிலையில் ஜனாதிபதி, பிரதமர் எல்லாம் சேர்ந்து அந்த சமூகத்தின் தலைவர் ஒருவருக்கு முத்திரை வெளியிடுவது வெட்கக்கேடான விடயமாகும்.” எனவும் வேலுகுமார் எம்.பி. குறிப்பிட்டார்.
