உள்ளாட்சிசபைத் தேர்தலை நடத்துவதற்கு அச்சமெனில் முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்துங்கள். முன்கூட்டியே தேர்தலை நடத்துவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் 50% பலத்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பதால் தேர்தலுக்காக ஒன்றுபடுவதை விடுத்து பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெக்க சகலரும் ஒன்றுபட வேண்டியது அவசியம் என ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே சஜித் இவ்வாறு கூறினார்.
” உள்ளாட்சிசபைத் தேர்தலுக்கு பாதீட்டில் 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில், நிதி இல்லை எனக்கூறி தேர்தலை அரசு பிற்போட்டுள்ளது.
நீதித்துறைசாரார்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி,மக்கள் தேர்தலை விரும்பவில்லை எனவும், நாடாளுமன்றத்தில் எந்த கட்சிக்கும் 50 சதவீத பெரும்பான்மை இல்லை எனவும் கூறியுள்ளார். மக்கள் ஆணை உள்ளதா இல்லையா என்பதை அறிவதற்கு முதலில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த அச்சமெனில் முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கவும். அதற்கான சட்ட திருத்தத்துக்கும் முழு ஆதரவு வழங்கப்படும்.” எனவும் சஜித் குறிப்பிட்டார்.
