” பெருந்தோட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளைக் கூட செய்துகொடுப்பதில்லை” – ஜனாதிபதியிடம் முறையிட தீர்மானம்

பெருந்தோட்ட நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண தலைமையில் நடைபெற்ற பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

அரசாங்கத்தினால் தனியாருக்கு வழங்கப்பட்ட பெருந்தோட்ட நிறுவனங்கள் தேயிலை உற்பத்தியைவிட வேறு தொழில்களில் நாட்டம் காண்பிப்பதாகவும், தோட்டங்களை சரியான முறையில் பராமரிக்காமல் இருப்பதுடன், பணியாளர்களுக்கு நலன்புரி சேவைகளை வழங்குவதில்லையென்றும், இவ்வாறான பெருந்தோட்ட நிறுவனங்களைக் கண்காணிப்பதற்கு உரிய பொறிமுறையொன்று இல்லையென்றும் இங்கு கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.

இந்தப் பெருந்தோட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களுக்குக் குறைந்த தொகையைச் செலுத்துவதுடன், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கூட செய்துகொடுப்பதில்லையென்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

மிகவும் மோசமான குத்தகை ஒப்பந்தத்துக்கு அமையவே இந்தப் பெருந்தோட்டங்கள் தனியார் துறைக்கு வழங்கப்பட்டுள்ளன. இதனால் அரசாங்கத்துக்கு இந்தப் பெருந்தோட்ட நிறுவனங்கள் குறித்த கட்டுப்பாடும் மோசமான நிலையிலேயே இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிறுவனங்கள் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதில்லை, விசேடமாக சில நிறுவனங்கள் தேயிலை பயிர்ச்செய்கையிலிருந்து விடுபட்டிருப்பது தெரியவந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறான நிறுவனங்களின் கீழ் பல ஹெக்டயர் காணிகள் பயிர்ச்செய்கை எதுவும் இன்றி பயன்படுத்தப்படாமல் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது என்றார்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி விரைவில் தீர்மானமொன்றை எடுக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, தென்னை போன்ற பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைகளில் காணப்படும் பிரச்சினைகள், பூச்சித் தாக்கங்களால் அவற்றுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. பூச்சித்தாக்கம் காரணமாக மாத்தறை மாவட்டத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த தென்னைப் பயிர்ச்செய்கையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

இதில் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர, பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, வீ.இராதாகிருஷ்ணன், எம்.ராமேஷ்வரன், வீரசுமன வீரசிங்ஹ, உதயகாந்த குணதிலக ஆகியோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Related Articles

Latest Articles