பதுளையைச் சேர்ந்த நபரொருவருக்கு கொரோனா தொற்று கண்டுப் பிடிக்கப்பட்டு, அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,சிகிச்சை பெற்றுவருகின்றார்.
குறித்த நபர் கடந்த வார இறுதியில் பதுளைக்கு வந்து, உனுக்கொட்டுவை என்ற இடத்தில் தமது வீட்டில் தங்கியிருந்துள்ளார். நான்கு தினங்கள் தங்கியிருந்த அந்நபர், பதுளை மாநகரின் இரு வங்கி ஏ.டி.எம். நிலையங்களில் பணம் கைமாற்றல்கள் செய்துள்ளார்.
அத்துடன், பதுளை நீதிமன்றக் கட்டிடத் தொகுதிக்கு சென்று,சட்டத்தரணிகள் சிலருடன் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டுள்ளார். அந்நபர் பதுளை சேனநாயக்க உள்ளரங்கு வழியாக பதுளை பிரதான பஸ் நிலையத்திற்கும் வந்துள்ளார்.
அதையடுத்து, பதுளை பிரதான பஸ் நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டு பஸ்ஸில் பயணித்து, வவுனியா பஸ் நிலையத்தில் இறங்கியுள்ளார்.
மறுதினம் அந்நபர், வவுனியாவில் தான் தொழில் செய்யும் கட்டிட நிருமாண தொழில் துறைக்கு சென்று தொழில் செய்ய ஆரம்பித்துள்ளார்.
அந்நிலையில், அவர் நோய்வாய்ப்பட்டு, வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டது. அவ்வேளையில் அவருக்கு கொரோனா நோய் அறிகுறிதென்பட்டதினால், பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது, அவருக்கு கொரோனாதொற்று ஏற்பட்டிருப்பது ஊர்ஜிதமாகியுள்ளது.
அதற்கான சிகிச்சைகள் அவருக்கு தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இது, தொடர்பான தகவல்கள் பதுளை சுகாதாரப் பணிப்பாளருக்கு கிடைக்கப்பெற்றதும், குறிப்பிட்ட நபரின் பதுளை வீட்டார் அனைவரும், தற்போது சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் அந்நபர் பதுளைமாநகரின் இரு வங்கிகளின்ஏ.டி.எம். நிலையங்களில் பணக் கைமாற்றல் செய்தமை,தொடர்புகொண்ட சட்டத்தரணிகள், ஏனைய நபர்கள், அந் நபர் சென்ற இடங்கள், பயணித்த பஸ்ஸில் பயணித்தவர்கள் ஆகிய விடயங்கள் குறித்து, பதுளைப் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து பதுளை சுகாதார பணிப்பகபிரிவினர் தீவிரபுலன் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
எம்.செல்வராஜா, பதுளை நிருபர்