கம்பளை நிருபர்
இலங்கை தேயிலை சபையின், கம்பளை கிளை அதிகாரிகளும், விஷேட அதிரடிப்படையினரும் இணைந்து உடுநுவர – வெலம்பொட பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின்போது, இரண்டு களஞ்சிய சாலைகளில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த – மனித பாவனைக்கு உதவாத 18 ஆயிரம் கிலோ கழிவுத் தேயிலை தூள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த களஞ்சியசாலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.
தேயிலை சபையின் உதவி ஆணையாளர் எஸ்.கே.டீ.பீ சிறிவர்தனவுக்கு நேற்று (26) பகல் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரமே மேற்படி சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது வெலம்பொட குரதெனிய பிரதேச களஞ்சிய சாலையிலிருந்து – மனித பாவனைக்கு உதவாத 11 ஆயிரத்து 463 கிலோ கழிவுத் தேயிலை தூளும், அபகஸ்தென்ன களஞ்சிய சாலையிலிருந்து 6 ஆயிரத்து 866 கிலோ கழிவுத்தேயிலை தூளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கழிவுத் தேயிலை தூள் வைக்கப்பட்டிருந்த களஞ்சிய சாலைகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
