” மலையக பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு , பரிந்துரைகளை முன்வைப்பதற்கு தேசிய ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டும். அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு உடன் அமுலுக்குவரும் வகையில் ஜனாதிபதி செயலணி நிறுவப்பட வேண்டும்.”
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுவரும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் சஜித் மேலும் கூறியவை வருமாறு,
பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் உரிய புள்ளி விபரம் அரசிடம் உள்ளதா? எனவே, முறையான கணக்கெடுப்பு நடத்தி தகவல்கள் பெறப்பட வேண்டும்.
பெருந்தோட்டப்பகுதியை எடுத்துக்கொண்டால் சுகாதாரம், கல்வி, உட்கட்டமைப்பு வசதி மற்றும் நலன்புரி விடயங்களில் பல குறைப்பாடுகள் காணப்படுகின்றன. தொழில்நுட்ப அறிவு, நவீன தொழில் நுட்ப பயன்பாடு என்பவற்றியும் பின்தங்கிய நிலை காணப்படுகின்றது. இவற்றை தீர்ப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
சர்வதேச தொழில் சட்டத்துடன், எமது நாட்டு தொழில்சட்டம் சில விடயங்களுடன் பொருந்தவில்லை. இதனாலும் தோட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றன.
பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட குத்தகை உடன்படிக்கையால்தான் இந்நிலைமை என சிலர் கூற முற்படுகின்றனர். அப்படியானால் 94 இற்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் தேங்காய் துருவினார்களா? ஒப்பந்தம் பலவீனமெனில் அதனை சீர்செய்வதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?
பெருந்தோட்ட மக்களின் வீட்டு பிரச்சினைக்கு தீர்வு வழங்காததற்கு இந்நாட்டை ஆண்ட அனைத்து அரசுகளும் பொறுப்புகூற வேண்டும். எனவே, இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பெருந்தோட்ட பகுதிகளில் பயிரிடப்படாத நிலங்கள் பயிரிடலுக்காக வழங்கப்பட வேண்டும். பயிரிடல் நில உரிமையும் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும். பெருந்தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும். எமது ஆட்சியில் முதல் பணி இதுவாகவே இருக்கும்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நிபந்தனை அடிப்படையில் அல்லாமல், ஏற்புடைய சம்பளம் வழங்கப்பட வேண்டும். மொழி, அரச சேவையில் சம உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அம்மக்களின் கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும். மலையக மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் தேர்தல் முறைமை இருத்தல் அவசியம்.
அதேவேளை, மலையக பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு தேசிய மட்ட ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டும். அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு ஜனாதிபதி செயலணி நிறுவப்பட வேண்டும். காலக்கெடுவுடன் காத்திரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.” – என்றார்.
