கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிவகித்த காலத்தில் அவரின் மிரிஹான வீட்டு வளாகத்தில் இராணுவ பஸ்சுக்கு தீ வைத்த நபர் ஒரு வருடமும், ஐந்து மாதங்களும் கடந்துள்ள நிலையில் சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவின் மிரிஹான வீட்டுக்கு முன்னால் 2022 மார்ச் 31 ஆம் திகதி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
அன்றிரவு போராட்டத்துக்கு மத்தியில் இராணுவ பஸ்ஸொன்றுக்கு தீ வைக்கப்பட்டது.
இது தொடர்பான விசாரணை சிஐடியினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
விசாரணைகளை முன்னெடுத்துவந்த அதிகாரிகள், பிரதான சந்தேகநபர் மஹியங்கனை பகுதியில் உள்ளார் என்பதை கண்டறிந்தனர்.
இதனையடுத்து அவர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளார். 33 வயதான மஹியங்கனை பகுதியை சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தான்தான் அந்த செயலில் ஈடுபட்டார் என்பதை விசாரணை அதிகாரிகளிடம் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். அவர் நேற்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். அவர் சார்பில் எந்தவொரு சட்டத்தரணியும் ஆஜராகவில்லை. எதிர்வரும் 11 ஆம் திகதிவரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.










