நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடியா?

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகும் தகவல்களை நிதி அமைச்சு முற்றாக நிராகரித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ மேற்படி தகவல்களை நிராகரித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,

“இலங்கையில் 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்டதுபோல பொருளாதார நெருக்கடி தற்போது மீண்டும் ஏற்படப்போகின்றது என பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

2022 இல் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதற்கும், தற்போதைய சூழ்நிலைக்கும் இடையில் தொடர்பு இல்லை. நாடு வங்குரோத்து நிலைக்கு சென்றதாலேயே 2022 இல் அந்நிலைமை ஏற்பட்டது.

ஊழல் மோசடி, அரசியல் ஸ்தீரமற்ற தன்மை என்பவற்றால் அல்ல , போர் மற்றும் பூகோள நிலைமையாலேயே தற்போதைய நிலை உருவாகியுள்ளது. அதாவது உள்ளக சூழ்நிலை அல்லாமல் வெளியக நிலையாலேயே தற்காலிக சவால் எமக்கு ஏற்பட்டுள்ளது.

போரின் விளைவாக எரிபொருள் விலை அதிகரிப்பானது எல்லா பொருட்களின் விலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.  எனவே, இன்று இருக்கும் நிலை வேறு. அன்று இருந்த நிலைவேறு.

எனினும், நாடு பிரச்சினையில் உள்ளது, எனவே, இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது.

அவ்வாறு எந்தவொரு கட்டுப்பாட்டையும் நாம் விதிக்கவில்லை. பொருளாதார செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்படவில்லை. பொருளாதாரம் இயங்கும் வேளையிலேயே பிரச்சினைக்கு தீர்வை தேட நாம் முயல்கின்றோம்.

எனவே, பொறுப்பற்ற விதத்தில் கருத்துகளை வெளியிட வேண்டாம் என அனைத்து தரப்பினரிடமும் கேட்டுக்கொள்கின்றோம்.
” – என்றார் பிரதி நிதி அமைச்சர்.

Related Articles

Latest Articles