” அகிம்சைவாதியான திலீபனை நினைவுகூருவது சட்டவிரோதமென – கோழைத்தனமாக அறிக்கை விடுத்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர், அந்த அறிவிப்பை உடன் மீளப்பெற வேண்டும்.” – என்று வலியுறுத்தியுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான வேலுகுமார்.
நாடாளுமன்றத்தில் இன்று (20) உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
” அகிம்சை வழியில் போராடி உயிர் தியாகம் செய்த திலீபனை நினைவுகூர்ந்து வாகன பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் பங்கேற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்மீது மிலேச்சத்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை தடுக்காமல் பொலிஸார் செயற்படும் விதத்தையும் காணொளிகளில் காணக்கூடியதாக இருந்தது.
இந்நிலையில் அரசின் பிரதிநிதியாக இருக்ககூடிய கிழக்கு மாகாண ஆளுநர், செல்வராசா கஜேந்திரனின் செயற்பாட்டு கண்டிக்கத்தக்கது என கோழைத்தனமாக அறிக்கை விட்டுள்ளார். ஒரு அகிம்சைவாதியை நினைவுகூர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், வழிமறிக்கப்பட்டு மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு கண்டனம் தெரிவிக்க அவருக்கு முதுகெலும்பில்லை. மாறாக நினைவேந்தலை சட்டவிரோதம் எனக்கூறி கோழைத்தனமாக அறிவிக்கை விடுத்துள்ளார். ஆளுநரின் செயலை கண்டிக்கின்றோம். அந்த கூற்றை அவர் மீளப்பெற வேண்டும்.” – என்றார்.
