ஜனாதிபதி தேர்தல் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், அடுத்த நிதியாண்டுக்கான பாதீட்டில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு 11 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
2024 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் இம்மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. பாதீட்டின் முதலாம் வாசிப்பாக இது கருதப்படும்.
அரசமைப்பின் பிரகாரம் அடுத்த வருடம் ஒக்டோபருக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும், நவம்பர் முதலாம் திகதிக்குள் ஜனாதிபதி பதவியேற்க வேண்டும்.
ஜனாதிபதியாக செயற்பட்ட கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியதையடுத்து, எஞ்சிய காலப்பகுதியாக நாடாளுமன்றம் ஊடாக ரணில் விக்கிரமசிங்க ஜுலை 20 ஆம் திகதி ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.
ஜனாதிபதியின் பதவி காலம் 2024 செப்டம்பரில் நிறைவடையவுள்ள நிலையில், அந்த காலப்பகுதியில் தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.
