மலையக மக்களுக்கான வீடமைப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அம்மக்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவையை பாராட்டியும், அவர்களை கௌரவிக்கும் வகையிலும் ‘நாம் – 200’ நிகழ்வின் அறிமுகவிழாவும், சின்னம் வெளியீடும் பிரதமர் தலைமையில் நேற்று (05.10.2023) நடைபெற்றது.
இதன்போது உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன,
பல தசாப்தங்களுக்கு முன்னர், தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க தொழிற்சங்கம் அமைக்க முயன்றபோது, இடதுசாரித் தலைவர்களான டாக்டர் என். எம். பெரேரா, பிலிப் குணவர்தன, கொல்வின் ஆர். டி சில்வா, எட்மண்ட் சமரக்கொடி போன்ற இடதுசாரித் தலைவர்கள் ஐரோப்பிய தோட்ட உரிமையாளர்களால் விரட்டியடிக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார்.
சௌமியமூர்த்தி தொண்டமான் உட்பட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமூகத் தலைவர்கள் பல வருடங்களாக தொழிலாளர்களுக்கான பல உரிமைகளை வென்றெடுப்பதில் வெற்றி பெற்றுள்ளதாகவும் ஜீவன் தொண்டமான், செந்தில் தொண்டமான் போன்ற புதிய தலைமுறை தலைவர்கள் மலையக சமூகத்தின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு செயற்பட்டு வருவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.










