“மலையகத்தின் கல்விசார் நகர்வின் வேகம் அதிகரிக்கப்பட வேண்டும்”

மலையகத்தின் எதிர்கால சந்ததியாரின் கல்விசார் நகர்வின் வேகம் மேலும் அதிகரிக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் காணப்படுகிறது. ஆகவே இவ்விடத்தில் பேதங்கள் கடந்து சிந்திப்பதும் அவை சார்ந்து செயலாற்றுவதும் மலையக மக்கள் பிரதிநிதிகளினதும் புத்திஜீவிகளினதும் பாரிய கடப்பாடாகும் என்று பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற சர்வதேச சிறுவர் தின விழாவில் தலைமை தாங்கி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
சர்வதேச சிறுவர் தினமானது அக்டோபர் மாதம் முழுவதுமாக கொண்டாடப்படுகிறது. சிறுவர் தினம் எனும் போது அது சிறுவர்களை மகிழ்விப்பது மாத்திரமன்றி அவர்களது உத்வேகத்தை வெளிக்கொணர்வதற்கான ஒரு வித தூண்டல் செயற்பாட்டுக் காரணியாகவும் காணப்படுகிறது.

ஆதலால் இந்த சர்வதேச சிறுவர் தினத்தை கொண்டாடுவதும் சிறுவர்களை மகிழ்விப்பதும் மேலும் அவர்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்வதும் நமது கடமையும் பொறுப்புமாக அமைந்திருக்கிறது.

இன்றைய நவீன உலகில் போதைப் பொருளின் ஆக்கிரமிப்பு அதிகரித்து அதுவே சமூக சீரழிவுக்கு இட்டுச் செல்வதை கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இதில் கவலைக்குரிய விடயம் யாதெனில் இதுவரை காலமும் இளைஞர்களையும் யுவதிகளையும் அதே நேரம் வளர்ந்தவர்களையும் ஆக்கிரமித்திருந்த இந்த போதைப் பொருளானது தற்போது சிறுவர்களையும் சீரழித்துக் கொண்டிருக்கிறது. இந்த விடயத்தில் நாம் அஜாக்கிரதையாக இருந்து விட முடியாது.

மாணவப் பருவம் என்பது மிகவும் பொக்கிஷமானது. அது முறையாகவும் அதேநேரம் காத்திரமாகவும் பருவமடைய வேண்டும்.

சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்பி வைத்ததோடு பெற்றோரின் கடமை முடிந்து விட்டதாக எவரும் எண்ணிவிடக் கூடாது. பாடசாலையில் ஆறு மணித்தியாலங்களே மாணவர்கள் ஆசிரியர்களுடன் இருக்கின்றனர். மிகுதி 18 மணித்தியாலங்களும் பெற்றோருட னேயே இருக்கின்றனர். ஆகவே தமது பிள்ளையை பேணிப் பாதுகாப்பது பெற்றோருடைய பொறுப்பாகும். தமது பிள்ளைகளின் பாதுகாவலராகவும் கண்காணிப்பாளராகவும் பெற்றோர் இருப்பது வேண்டியது கட்டாயமாகிறது.

மலையக சந்ததியாரின் கல்விசார் நடவடிக்கைகள், அவை சார்ந்த கட்டமைப்புகளுக்கான முன்னெடுப்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கான நகர்வுகளின் வேகம் இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது எனது எண்ணமாகும். அதற்காக சமூகம் சார்ந்த சிந்தனை மிக மிக அவசியம்.

நமது சந்ததியாரின் கல்வி சார்ந்த அனைத்து நடவடிக்கைகளின் வேகத்தையும் அதிகரிப்பதற்கு மலையகம் சார்ந்த அனைத்து புத்திஜீவிகள், அரசியல் பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள் என அனைத்து தரப்பினரும் பேதங்கள் கடந்து சிந்திக்க வேண்டும் என்பதும் அவற்றை அவ்வாறே செயல்படுத்த வேண்டும் என்பதும் எனது வேண்டுகோளாகவும் கோரிக்கையாகவும் அமைகிறது என தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles