‘அடுத்த வருடம் வலுவான அணியாக வருவோம் ‘- டோனி

” அடுத்த தலைமுறைக்கு கொஞ்சம் கொஞ்சமாக அணியை ஒப்படைக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.” என்று டோனி தெரிவித்தார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நடப்பு சீசனில் சென்னை அணி தனது கடைசி லீக் பஞ்சாப் அணியை எதிர்த்து இன்று விளையாடியது. இந்தப் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வென்று இரசிகர்களுக்கு ஆறுதலை கொடுத்தது.

இந்தப் போட்டி முடிந்தபிறகு பேசிய டோனி கூறியவை வருமாறு,

” இது எங்களுக்கு கடினமான தொடராக அமைந்தது, நாங்கள் முழு ஆற்றலையும் செலவிட்டு விளையாடினோம் என நான் நினைக்கவில்லை. 6-7 போட்டிகள் மிக கடினமாக அமைந்தன.அடுத்த ஆண்டு ஐபிஎல் ஏலம் குறித்து பிசிசிஐ என்ன முடிவெடுக்கிறது என பார்க்க வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளை கணக்கில் கொண்டு அணியில் சிறிது மாற்றம் செய்யவேண்டும்.

ஐபிஎல்லின் தொடக்கத்தில் நாங்கள் ஒரு அணியை உருவாக்கினோம். அது நன்றாக செயல்பட்டது. தற்போது அடுத்த தலைமுறைக்கு கொஞ்சம் கொஞ்சமாக அணியை ஒப்படைக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது

ருதுராஜ் கெய்க்வாட்டை பொருத்தவரை அவர் சிறப்பாக விளையாடினார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் குணமாகி 20 நாட்கள் கழித்தும் அவர் உடல்திறன் முழுமையாக சரியாகவில்லை. அவருக்கு போதிய பயிற்சி செய்யும் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. அதனால் தான் வாட்சன் மற்றும் டு பிளஸிஸுடன் நாங்கள் விளையாட வேண்டியதாக இருந்தது. ஆனால் அது சரியாக அமையவில்லை. ரசிகர்களுக்கு சொல்லும் செய்தி என்னவெனில் நாங்கள் மீண்டும் வலுவாக திரும்பி வருவோம்.

அனைத்து அணிகளும் சிறப்பாக விளையாடும் தொடர்களில் இதுவும் ஒன்றாகும். நான் இந்த தொடரோடு ஓய்வு பெற்று விடுவேன் எனக்கருதி பல வீரர்கள் என்னிடம் ஜெர்சியை வாங்கியிருக்கலாம்” என்றார்.

Related Articles

Latest Articles