ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விமர்சிப்பதைவிடுத்து, முதுகெலும்பிருந்தால் அரசில் இருந்து வெளியேறி எதிரணியில் அமர்ந்து காட்டுமாறு சாகர காரியவசம், நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எம்.பிக்களுக்கு பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா.
கடந்த பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் போட்டியிட்ட நிமல் லான்சா, நாடாளுமன்றத்தில் தற்போது சுயாதீனமாக செயற்படுவதுடன், ரணில் ஆதரவு முன்னணியையும் கட்டியெழுப்பிவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பை விமர்சித்துள்ள சாகர காரியவசம், நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே நிமல் லான்சா மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” சாகர காரியவசம், நாமல் ராஜபக்ச உள்ளிட்டவர்கள் ஊடகங்கள் முன்னிலையில் வீராப்பு பேசிவருகின்றனர். இவ்வாறு வீராப்புபேசுவதை விடுத்து, ஜனாதிபதிமீது அதிருப்தி இருந்தால் அதனை வெளிப்படையாக கூறிவிட்டு எதிரணியில் அமர்ந்து காட்டட்டும். பாதீடு வருகின்றது, முடிந்தால் அதற்கு எதிராக வாக்களித்துவிட்டு வெளியேறட்டும். பாதீட்டை தோற்கடித்து நாடாளுமன்ற தேர்தலை வலியுறுத்தட்டும். முதுகெலும்பிருந்தால் இதனை செய்துகாட்டட்டும். ஆனால் மொட்டு கட்சியினர் பாதீட்டை தோற்கடிக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் தேர்தலுக்கு பயம். முடிந்தால் எனது சவாலை ஏற்கட்டும். ” – என்றார் நிமல் லான்சா.
