‘மில்கோ’ நிறுவனத்தின் தலைவரை உடன் பதவி நீக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து மதிய உணவு நேரத்தின்போது , நுவரெலியா அம்பேவல மில்கோ பால் சேகரிப்பு நிலையம் தொழிற்சாலைக்கு முன்பாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டன.

நுவரெலியா , அம்பேவல – ஹைலேண்ட் மில்கோ நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
” மில்கோ நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. அதனால்தான் இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கான வரியை குறைத்துள்ளது , தொழிலாளர்களின் வேலை பாதுகாப்பு இழப்புக்கு அரசாங்கமே முழு பொறுப்பேற்க வேண்டும் , நிலுவைத் தொகை மற்றும் கொடுப்பனவுகளை உரிய முறையில் வழங்க வேண்டும்.” என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

அத்துடன், மில்கோ நிறுவனத் தலைவர் ரேணுகா பெரேராவை உடனடியாக பதவியில் இருந்து நீக்குமாறு வலியுறுத்தினர்.
” எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் எதிர்வரும் நாட்களில் பாரிய தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.” – எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
டி.சந்ரு செ.திவாகரன்










