” மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக அரசியல், தொழிற்சங்க பேதங்களுக்கு அப்பால் மலையக சமூகமாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். ” – என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மக்கள் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அழைப்பு விடுத்தார்.
மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அதனை நினைவுகூரும் முகமாகவும், அம்மக்கள் இலங்கைக்கு ஆற்றிய சேவைகளையும், இலங்கையின் பொருளாதாரத்துக்கு வழங்கிய பங்களிப்பை பாராட்டி இலங்கை அரசின் அனுசரணையுடன் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் இடம்பெறும் நாம் 200 தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.
” எதற்காக இந்த நிகழ்வு, எதற்காக இந்த அங்கீகாரம் என கேள்வி எழுப்புபவர்கள் இருக்கவே செய்கின்றனர், காட்டை, தோட்டமாக்கி, தோட்டத்தை வளமாக்கி இந்த நாட்டுக்கு இலவசக் கல்வியும், இலவச சுகாதாரமும் கிடைக்க காரணமாக இருந்த மலையக மக்களை அங்கீகரிக்கவே இந்த நிகழ்வாகும். இவ்வாறு இந்த நாட்டுக்கு இலவசக் கல்வியும், சுகாதாரமும் கிடைப்பதற்கு எமது மக்கள் பங்களிப்பு வழங்கி இருந்தாலும் இலவசக் கல்வி, இலவச சுகாதாரம் என்பன எமது சமூகத்துக்கு முறையாக – முழுமையாக கிடைக்கவில்லை என்ற யதார்த்தத்தையும் கூறியாக வேண்டும்.
அரசியல் ரீதியிலான தீர்மானங்களைவிட எமது சமூகத்துக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மையான மாற்றம் அவசியம். இந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி பாரிய பங்களிப்பை செய்துள்ளார். மலையக மக்களுக்கென 15 ஆயிரம் வீட்டு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. அண்மையில்கூட மலையக மேம்பாட்டுக்காக 3 ஆயிரம் மில்லியன் ரூபா வழங்கப்பட்டது. இதேபோல மேலும் சில வேலைத்திட்டங்களும் எமது மக்களுக்காக இந்திய அரசின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
எமது மலையக மக்கள் தாழ்ந்தவர்கள் கிடையாது, முடியாது ,முடியாது எனக்கூறினால் முடக்கவே முற்படுவார்கள், நாம் முன்னேறி வரவேண்டும். 13லட்சம் மலையக தமிழர்களுள் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர்தான் தோட்டத் தொழிலாளர்களாக உள்ளனர்.
1948 இல் குடியுரிமை பறிக்கப்பட்டது. குடியுரிமை முழுமையாக கிடைப்பதற்கு 55 ஆண்டுகளுக்கு மேல் சென்றது. குடியுரிமை பிரச்சினை முழுமையாகதீர 2003வரை எடுத்தது. 1964 இல் சிறிமா -சாஸ்திரி ஒப்பந்தம் ஊடாக எமது மக்கள் நாடு கடத்தப்பட்டனர். இப்படி பல துயரங்கள் இருந்தாலும் எல்லாவற்றையும் தாண்டி எமது இளைஞர்கள் இன்று சாதித்துக்கொண்டுள்ளனர் என்பதை பெருமையாகக் கூறிக்கொள்கின்றேன்.
நாம்200 ஐ சிலர் கொண்டாட்டமாக பார்க்கலாம், மேலும் சிலர் வேறு கோணத்தில் பார்க்கலாம். ஆனால் மாற்றத்தின் ஆரம்பமாக இந்நிகழ்வை நாம் பார்க்கின்றோம் மாற்றம் என்பது இங்கிருந்துதான் துரிதமாக ஆரம்பமாகும் என்பதை கூறிக்கொள்கின்றேன். எனது காலகட்டத்துக்குள் இந்த மாற்றத்தை காண்பதற்கு நிச்சயம் பாடுபடுவேன்.
பிரதம அதிதியாக இந்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றிருந்தாலும், இந்த அரங்கில் இருக்கும் மக்கள்தான் உண்மையான பிரதம அதிதிகள். அழைப்பையேற்று வருகை தந்ததற்காக தலை வணங்கி நன்றி தெரிவிக்கின்றேன்.
வாக்கு வேட்டைக்காக எமது சமூகம் பயன்படுத்தப்பட்டது, எவரும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான திட்டங்களை முன்வைக்கவில்லை. பாதீட்டில் வழமையாக எமக்கு 3 ஆயிரம் மில்லியன்தான் கிடைக்கும், ஆனால் இம்முறை பாதீட்டில் 14 ஆயிரம் மில்லியன் ரூபா கிடைத்துள்ளது. எனவே, அனைத்து மாவட்டங்களிலும் மாற்றத்தை கொண்டுவருவோம். 10 ஆயிரம் வீட்டு திட்டமும் இன்றில் இருந்து ஆரம்பமாகும்.
மலையகத்தை பொறுத்தமட்டில் கலாசாரம் மாற வேண்டும், சிந்தனைகள் மாற வேண்டும். நமக்குள்ளேயே பிரவினை உள்ளது. இந்த பிரிவினையைதாண்டி அரசியல் தலைவர்கள், தொழிற்சங்க தலைவர்கள் என நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இவ்வாறு ஒன்றிணைந்து சமூகத்தை முன்னோக்கி கொண்டுசெல்ல நான் தயார்.” – என்றார்.










