O/L பரீட்சை பெறுபேறு – நுவரெலியா கல்வி வலயத்தில் கேம்பிரிட்ஜ் கல்லூரி சிறந்த பெறுபேறு ! வலய கல்வி பணிப்பாளர் பாராட்டு

நுவரெலியா கல்வி வலயத்தில் தொடர்ச்சியாக சிறந்த பெறுபேறுகளை பெற்று தனது நிலையை தக்கவைத்துவரும் கேம்பிரிட்ஜ் கல்லூரியின் செயற்பாடுகளுக்கு அர்ப்பணித்து வரும் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகத்துக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக நுவரெலியா கல்வி வலய பணிப்பாளர் டி.எம்.பி.எல்.அபேரத்ன தெரிவித்துள்ளார்.

உலக விஞ்ஞான தினத்தை முன்னிட்டு கேம்பிட்ஜ் கல்லூரியின் விஞ்ஞான கணித மன்றத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வில் வெற்றியீட்டிய மாணவர்களை பாராட்டும் நிகழ்வும் , க.பொ.த சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொடுப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஆசிரியர்களை பாராட்டும் நிகழ்வு அதிபர் ஜே.ஏ.நிக்கலஸ் தலைமையில் இடம்பெற்றபோது பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரைநிகழ்த்தும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கோட்டம் இரண்டின் கல்விப்பணிப்பாளர் எஸ்.ஜெகதீஸ்வரன் உதவிகல்விப்பணிப்பாளர் திருமதி.வேணுகோபால் சர்மா முன்னாள் ஆசிரிய ஆலோசகர் கணேசன் பயிற்சிக்காக வருகை தந்த அதிபர்கள் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய அவர்,

” கடந்த காலத்தில் எமது நாட்டில் ஏற்பட்ட நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சிறந்த பெறுபேறுகளை இந்த பாடசாலை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது. இவ்வாண்டு பல்வேறு இணைப்பாட செயற்பாடுகள் இடம்பெற்றது. அந்நிகழ்வுகளில் மாணவர்களிடம் காணப்பட்ட பல்வேறு திறன்களை வெளிக்கொண்டு வர முடிந்தது.

இன்றைய நிகழ்வுகளில் மாணவர்கள் விஞ்ஞான கணித மற்றும் நுண்ணறிவு சார்ந்த துறைகளில் தங்களது திறன்களை வெளிப்படுத்தினர். அவர்களுக்கும் வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவிப்பதாக அவர் தெரிவித்தார்.

பாடசாலையின் அதிபர் ஜே.ஏ.நிக்கலஸ் உரைநிகழ்த்துகையில், கடந்த வாரம் வெளியான க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் கேம்பிரிட்ஜ் கல்லூரி சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளதுடன் வலய மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளது.

பரீட்சைக்கு தோற்றிய 94 மாணவர்களில் அனைவரும் க.பொ.த உயர்தரத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாண்டு எமது பாடசாலையில் பல்வேறு இணைப்பாட விதான செயற்பாடுகளின் ஊடாக மாணவர்களின் திறன்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து எமது பாடசாலையின் நிலையை தக்க வைத்து மேலும் மேம்பாடடைய ஆசிரியர்கள் மாணவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்வில் முன்னாள் ஆசிரிய ஆலோசகர் திரு.கணேசன் கௌரவிக்கப்பட்டார்.

கொட்டகலை நிருபர் – தி.தவராஜ்

Related Articles

Latest Articles