கொட்டகலையில் இராணுவ முகாம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தனக்கு எவ்வித உத்தியோகப்பூர்வத் தகவலும் கிடைக்கவில்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொட்டகலையில் இராணுவ முகாம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான இராதாகிருஷ்ணன் நேற்று (12) தெரிவித்த கருத்தின் உண்மைத் தன்மை குறித்து வினவியபோதே, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
இராணுவப் பேச்சாளர் சந்தன விக்ரமசிங்க மேலும் தெரிவித்ததாவது,
” நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பாதுகாப்பு அமைச்சு தீர்மானிக்கும் எந்த இடத்திலும் இராணுவ முகாம்கள் அமைக்கப்படலாம். எனினும், கொட்டகலை சம்பவம் குறித்து எனக்குத் தெரியாது. கொட்டகலையில் இராணுவ முகாமொன்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எவ்வித உத்தியோகப்பூர்வ தகவலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை. அவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதும் இல்லை” என்றார்.
கொட்டகலையில் நேற்று (12) மாலை நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் இராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது,
பாதுகாப்பு பற்றி கதைத்தவர்கள் இன்று கொட்டகலையிலும் இராணுவ முகாமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். இவ்வாறு இராணுவ முகாம் அமையுமானால், அது மக்களுக்கு இடைஞ்சலாகவே அமையும். இரவில் நடமாடினால் உள்ளே போட்டுவிடுவார்கள். பொலிஸாரிடம் சரி, உண்மையை எடுத்துக்கூறிவிட்டு வந்துவிடலாம். ஆனால், இராணுவம் வந்தால் அவ்வாறு செய்ய முடியாது. சிவில் நிர்வாகத்துக்கும் இராணுவ நிர்வாகத்துக்கும் இடையிலான வேறுபாடு இதுதான்.” – என்றார்.
நன்றி – medialk.com