‘அசுவெசும’ செயற்றிட்டத்துக்குள் புதியவர்கள் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் ஜனவரி மாதம் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் விடுபட்டவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க முடியும். இவ்வாறு விடுபட்டவர்களை இணைத்துக்கொள்வதில் அதிகாரிகள் ஆக்கபூர்வமாக செயற்பட வேண்டும் என்று பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,
மந்தபோஷணை தொடர்பாக நாட்டின் பல்வேறு துறை சார்ந்தோராலும் பரவலாக பேசப்படுவதை அவதானிக்கமுடிகிறது. நாட்டின் மந்த போஷணை வீதம் அதிகரித்துக் காணப்படுகிறது.
இந்த அதிகரிப்புக்கு பிரதான காரணமாக அமைவது மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் பதிவாகின்ற மந்த போஷணையின் அதிகரிப்பாகும். ஒட்டுமொத்தமாக ஒப்பிடும்போது மலையகத்தின் மந்தபோஷணையானது 100 வீதத்தை தொட்டு நிற்கிறது. மலையகத்தில் வாழக்கூடிய சிறுபராயத்தினர் அனைவருமே மந்தபோஷணைக்குள் சிக்கிக் கொண்டுள்ளனர் என்பது கவலைமிக்கதாகும்.
மலையகப் பெருந்தோட்டங்களைப் பொறுத்தவரையில் பிறக்கும்போது மந்தபோஷணை, வளரும் போது மந்தபோஷணை, பாடசாலை செல்லும்போது மந்தபோஷணை என்ற நிலைமை உச்சக்கட்டத்தில் இருக்கிறது.
ஆகவே மந்தபோஷணையை இல்தொழிப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.
இவ்விடயத்தில் மிகச் சரியான தகவல்கள் திரட்டப்பட்டு ஏற்ற தாழ்வுகள் அற்ற வகையில் செயற்பட்டால் மாத்திரமே நாட்டினது மந்தபோஷணைக்கு முடிவுகட்ட முடியும்.
இது இவ்வாறிருக்க ‘அசுவெசும’ செயற்றிட்டத்தைப் பொறுத்தவரையில் அதனை மலையகத்தில் தோல்வியடைந்த செயற்றிட்டமாகவே காண்கிறேன்.
‘அசுவெசும’ செயற்றிட்டத்துக்குள் உள்வாங்கப்பட வேண்டியவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அதனால் அது தோல்வியடைந்த திட்டமாகக் காணப்படுகிறது. இது விடயமாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவின் கவனத்து கொண்டு சென்ற அதேவேளை அங்குள்ள நிலைமைகளை அவரிடம் விபரமாக எடுத்துக் கூறியுள்ளளேன்.
அந்தவகையில் ஜனவரி மாதம் ‘அசுவெசும’ செயற்றிட்டத்துக்குள் புதியவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதால் மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் விடுபட்டவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க முடியும் என்பதை தெரிவித்துள்ளார். இந்த விடயங்களை பாராளுமன்றத்திலும் முன்வைத்துள்ளேன்.
ஆகையால் ‘அசுவெசும’ செயற்றிட்டத் துக்குள் புதிதாக பயனாளர்களை உள்வாங்கும்போது மலையக பெருந் தோட்டப் பகுதிகளில் விடுபட்டவர்களை இணைத்துக்கொள்வதில் அதிகாரிகள் ஆக்கபூர்வமாக செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.










