ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தம்மிக்க பெரேராவை களமிறக்கவுள்ளதால் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார் – என்று அடித்து கூறியுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தி.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கூறியவை வருமாறு,
” ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு எதிர்வரும் ஜுலை மாதம் விடுக்கப்பட வேண்டும். அத்தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.
அவர் ஜனாதிபதி தேர்தலில் இரு தடவைகள் தோல்வி அடைந்தார். மூன்றாவது தடவை பொது வேட்பாளரைக் களமிறக்கினார். 2015 இலும் அதுவே நடந்தது. ஆனால் இன்று அதிஷ்டத்தால் ரணில் ஜனாதிபதி ஆகியுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சம்மேளனம் அண்மையில் நடைபெற்றது. இதன்போது தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக்க பெரேரா என்பதை அவர்கள் உறுதிப்படுத்தினர். மாநாட்டில் தம்மிக்க பெரேராவுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது.
எனவே, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் ரணிலுக்கு இடமில்லை. ஐக்கிய தேசியக் கட்சியிலும் களமிறங்கமாட்டார். ஏனெனில் தோல்வி நிச்சயம்.
அதேவேளை, வயது முதிர்ந்த அரசியல்வாதிகள் ஜனாதிபதி பதவிக்கு வருவதை இளைஞர்கள் விரும்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ” – என்றார்.