தேதிமுக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் மறைவுக்கு மலையக அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
” சூறாவளியாக எழுந்தார். திடீரென அமைதி தென்றல் ஆனார். புரட்சி தமிழ் நடிகர், எழுச்சி அரசியலர் என்ற பிரபலங்களை மீறி சிறந்த மனிதர் என அறியப்பட்டார். தேதிமுக தலைவருக்கு ஆழ்ந்த அஞ்சலி.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானும் அனுதாபம் தெரிவித்துள்ளார்.
இதொகாவின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் உள்ளிட்டவர்களும் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.
செந்தில் தொண்டமான் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது,
” விஜயகாந்த் மக்களுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த மனிதர். விஜயகாந்துடன் பல முறை ஏற்பட்ட சந்திப்பின் போது அவருடைய எண்ணங்களிலும் செயல்களின் ஊடாகவும் அவர் ஒரு போற்றப்படக் வேண்டிய தலைவர் என்பதை தான் அறிந்தேன்.
எவருக்கும் அஞ்சாது மக்களுக்காக உடனுக்குடன் சேவையை செய்யும் அரசியல் தலைவன். மேலும் இலங்கை மக்கள் மீது அதீத அன்பு கொண்ட இவர். இலங்கையில் உள்ள பாமர மக்களுக்காக விளம்பரமற்ற பல உதவிகளை செய்துள்ளார்.
இவர் பாமர மக்களுக்கு விருந்தோம்பல் செய்வதில் ஈடு இணையற்றவர் இவருடைய இழப்பு தமிழக மக்களுக்கும் ஓர் பேரிழப்பாகும்.
நடிகர் விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்”. – என்றுள்ளது.










