மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும். ராஜபக்ச அல்லாத ஒருவர் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைப்பதவிக்கு வரவேண்டும் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் அனுசரணையுடன் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நான் பொதுவேட்பாளராக களமிறங்கவுள்ளதாக சுதந்திர மக்கள் சபை உறுப்பினர்களிடம் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தகவலில் எவ்வித உண்மையும் இல்லை.
எமது அரசியல் கொள்கை பற்றி தெரிந்த மக்களுக்கு இது பொய் என்பது தெரியும். எனினும், இதனை வைத்து எதிர்காலத்திலும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படலாம் என்பதால்தான் நிராகரிக்கின்றேன்.
மஹிந்த ராஜபக்சவின் பொருளாதாரக் கொள்கைகளை கடுமையாக 2014 இலேயே விமர்சித்தவன் நான். நாடு வங்குரோத்து அடையும் என அன்றே கூறியிருந்தேன்.
நாட்டை வங்குரோத்து அடைந்ததரப்புடன் நாம் இணையமாட்டோம். எனவே, மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும். ராஜபக்ச அல்லாத ஒருவரிடம் மொட்டு கட்சி தலைமைப்பதவி வழங்கப்பட வேண்டும்.
அதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எமக்கும் இடையில் அரசியல் உறவு கிடையாது. அவருடனும் அரசியல் கூட்டணி அமைக்கமாட்டோம்.” – என்றார்.










