இந்திய உதவியுடன் ரயில் பாதை மேம்படுத்தல் பணி ஆரம்பம்!

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுவரும் மாஹோ முதல் ஓமந்தை (128கிமீ) வரையிலான புகையிரத பாதை மேம்படுத்தல் பணிகளின் இரண்டாம் கட்டமான அநுராதபுரம் முதல் மாஹோ வரையான புகையிரதப் பாதையின் மேம்படுத்தல் பணிகள் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரால் கல்கமுவ புகையிரத நிலையத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அனுராதபுரம் முதல் மாஹோ வரையிலான குறித்த ரயில் பாதையின் புனரமைப்பு பணிகளின் இரண்டாம் கட்ட பணித்திட்டத்துக்காகவே 91.27 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் ஆறு மாத காலப்பகுதிக்குள் இத்திட்டம் பூர்த்திசெய்யப்படவுள்ளது.

வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார மற்றும் இலங்கை போக்குவரத்து அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

இங்கு உரை நிகழ்த்தியிருந்த போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, குறிப்பாக போக்குவரத்துத் துறை உட்பட பல்வேறு துறைகளுக்காகவும் இந்தியாவால் வழங்கப்பட்ட ஆதரவுக்காக நன்றியினைத் தெரிவித்திருந்த அதேவேளை, கடந்த சில வருடங்களாக IRCON நிறுவனத்தால் வழங்கப்பட்ட சேவைகளையும் பாராட்டியிருந்தார். அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையில் புகையிரத துறையில் சிறந்த ஒத்துழைப்புக்காகவும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகள் மற்றும் தேவைகளின் அடிப்படையில், இலங்கையின் வடக்கு மற்றும் தெற்கு புகையிரத பாதைகளின் அபிவிருத்தி மற்றும் புனரமைப்பு பணிகளுக்கான திட்டங்களை இலங்கையின் நீண்டகால அபிவிருத்தி பங்காளியாக இந்தியா கடந்த பல வருடங்களாக முன்னெடுத்து வருவதாக உயர் ஸ்தானிகர் மகிழ்ச்சியினை தெரிவித்தார்.

இலங்கையில் பொருட்கள் மற்றும் இதர சேவைகளுக்கான போக்குவரத்தினை அபிவிருத்தி செய்வதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் புகையிரத துறையின் நவீனமயமாக்கலின் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கு இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவிகளில் புகையிரத துறைகளுக்காக வழங்கப்படும் உதவிகளும் முன்னுரிமை ஸ்தானத்தில் காணப்படுகின்றன.

இந்திய கடனுதவி திட்டங்களின் கீழ் இதுவரையில் 1 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியான திட்டங்களை இந்தியா நிறைவேற்றியுள்ளது.

இந்திய பொதுத்துறை நிறுவனமான IRCON 2009 மார்ச்சில் இலங்கையில் தனது பணிகளை ஆரம்பித்திருந்தது.

தெற்கு மார்க்க (115 கிமீ) ரயில் பாதையினை புனரமைத்தமை மற்றும் வட மாகாணத்தின் ஒட்டுமொத்த ரயில் பாதை (235 கி.மீ) வலையமைப்பினை மீள்நிர்மாணம் செய்தமை மூலமாக இலங்கை ரயில்வேயின் நவீன மயமாக்கலுக்கு IRCON கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளது. அத்துடன், 330 கிமீ நீளமுள்ள ரயில் பாதையின் நவீன சமிக்கை தொகுதி மற்றும் தொலைத்தொடர்பு முறைமைகளை நிர்மாணித்ததன் மூலம் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கும் IRCON பங்களிப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 2022 இல் இலங்கை அரசாங்கத்தால் கடன் ஸ்தம்பித நிலை அறிவிக்கப்பட்ட போதிலும், இந்தியாவின் பல்வேறு கடனுதவிகளின் கீழ் இலங்கைக்கான ஆதரவு தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்திய கடனுதவிகளின் கீழ் 14.90 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியில், இலங்கை ரயில்வேக்கான சமிக்கை அமைப்பை வடிவமைத்தல், நிறுவுதல், சோதனை செய்தல் மற்றும் இயக்குதல் ஆகியவற்றுக்கான ஒரு புதிய ஒப்பந்தத்தில் செப்டம்பர் 2023 இல், இலங்கையின் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சும் IRCON இன்டர்நேஷனல் நிறுவனமும் கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Latest Articles