உட்கட்சி மோதல் – தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு ஒத்திவைப்பு!

திருகோணமலையில் நாளை (28) நடைபெறவிருந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் சிரேஷ்ட தலைவரான மாவை சேனாதிராஜா இன்று அறிவித்தார்.

கட்சியின் மத்தியகுழு கூடி புதிய திகதியை தீர்மானிக்கும் எனவும் அவர் கூறினார்.தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் திருகோணமலையில் இன்று நடைபெற்றது.

இதன்போது செயலாளர் பதவி உட்பட கட்சியின் நிர்வாகப் பதவிகளுக்கு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவிருந்த நிலையில், பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பில் கடும் சர்ச்சை ஏற்பட்டது.

இதனையடுத்து பொதுச்செயலாளர் பதவி தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் குகதாசன் 112 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.

அதன்பின்னர் பொதுச்சபை கூடியது. மத்திய குழு எடுத்த முடிவை அங்கீகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது. எனினும், குழப்பம் ஏற்பட்டதால், கூட்டம் நிறைவுபெற்றது.

தனது தெரிவு சட்டப்பூர்வமானது என புதிய பொதுச்செயலாளராக தெரிவுசெய்யப்பட்ட குகதாசன் தெரிவித்தார். மாநாடுதான் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அவர்கள் குறிப்பிட்டனர், மாறாக செயலாளர் பதவி பற்றி பேசவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles