உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பலின் பயணம் ஆரம்பம்…

உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல், இன்று தன் பயணத்தைத் தொடங்கியது. இந்தக் கப்பலின் முதல் சேவை இன்று அமெரிக்காவில் உள்ள மியாமி துறைமுகத்தில் இருந்து தொடங்கி உள்ளது.

தி சீஸ்’ (Icon of the Seas) எனப் பெயர் சூட்டப்பட்ட இந்தக் கப்பலை, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த பிரபல ராயல் கரீபியன் கப்பல் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தக் கப்பலின் மொத்த எடை 2.5 லட்சம் டன். 1,200 அடி நீளம் கொண்டது. உலகின் மிகப்பெரிய கப்பல் என்று அழைக்கப்பட்ட டைட்டானிக் (882.9 அடி நீளம், 46,328 டன் எடை)கப்பலைவிட இந்தக் கப்பல் பன்மடங்கு எடைகொண்டது.

மொத்தம் 20 தளங்களைக் கொண்ட இந்த கப்பலில் 6 நீர் சறுக்குகள், 7 நீச்சல் குளங்கள், ஒரு பனி சறுக்கு வளையம், ஒரு தியேட்டர் மற்றும் 40-க்கும் மேற்பட்ட உணவகங்கள், பார்கள் மற்றும் ஓய்வறைகள் உள்ளன. இக்கப்பலில் ஒரேநேரத்தில் மொத்தம் 7,600 பேர் பயணிக்க முடியும். கப்பல் ஊழியர்கள் மட்டுமே 2,350 பேர் இருப்பர்.

எனவே விருந்தினர்களாக 5,610 பேர் பயணிக்கலாம். மூன்று மாடிகள் கொண்ட டவுன் ஹவுஸ் இதில் காணப்படுகிறது. அதில் 28 வெவ்வேறு விதமான அறைகள் உள்ளன. இந்த கப்பல், தனது முதல் பயணத்தின்போது தெற்கு புளோரிடாவிலிருந்து புறப்பட்டு, வெப்ப மண்டல தீவுகளைச் சுற்றி 7 நாட்கள் பயணம் செய்ய உள்ளது. இதில் பயணிக்க 2026-ஆம் ஆண்டு வரை டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது.

7 நாட்கள் பயணத்திற்கு 1,800 டாலர் முதல் 2,200 டாலர் (இந்திய மதிப்பில் 1,50,000 ரூபாய் முதல் 1,83,000 ரூபாய்) வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கப்பலின் அதிகாரபூர்வ ஐகானாக பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ராயல் கரீபியன் குழுமத்தின் தலைவர் ஜேசன் லிபர்டி, “இந்தக் கப்பல், 50 ஆண்டுகளுக்கும் மேலான எங்கள் கனவுகள், புதுமைகள் மற்றும் முயற்சிகளின் வெளிப்பாடு. உலகின் மிகச்சிறந்த விடுமுறைக்கால அனுபவங்களை இது வழங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles