நீதிமன்ற உத்தரவை கருத்திற்கொள்ளாமல் ஐக்கிய மக்கள் சக்தி பேரணிமீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிற்கு எதிராக அடிப்படை உரிமைமீறில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ஆயிரக்கணக்கான மக்கள் கொழும்பில் அணிதிரண்டு அரசுக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டனர். மக்கள் அலைக்கு அஞ்சி, ரணில் விக்கிரமசிங்க பொலிஸாரை ஏவிவிட்டு அறவழி போராட்டம்மீது தாக்குதல் நடத்தினார். ஐவர் வைத்தியசாலையில் உள்ளனர்.
எமது பேரணிக்கு எதிராக குருந்துவத்த பொலிஸாரும் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற சென்றிருந்தனர். எனினும், எதிர்ப்பு தெரிவிக்க, பேரணி நடத்த, கருத்து வெளியிட அரசமைப்பின் பிரகாரம் அனுமதி உள்ளது என சுட்டிக்காட்டி, தடை உத்தரவை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
இந்நிலையிலேயே குருந்துவத்த பொலிஸ் அதிகார பிரிவில் வைத்து எம்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது சட்டவிரோத நடவடிக்கையாகும். அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் நீதிமன்ற உத்தரவைமீறும் வகையில் செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக அடிப்படை உரிமைமீறல் வழக்கு தாக்கல் செய்யப்படும்.
அரசுக்கு எதிராக எதிர்ப்புவரும்போது படையினரை களமிறக்கி ஒடுக்குவதற்கான முயற்சி இடம்பெறுகின்றது. எனவே, சட்டத்தை மதித்து செயற்படுமாறு பாதுகாப்பு தரப்பினருக்கு கூறிவைக்க விரும்புகின்றோம்.” – என்றார்.










