செங்கடலில் படைகளை களமிறக்கும் ஐரோப்பிய ஒன்றியம்!

சர்வதேச வணிக போக்குவரத்தில் முக்கிய வழித்தடமாகவுள்ள செங்கடலில் ஹுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் அதிகரித்துவரும் நிலையில், செங்கடல் பாதுகாப்பு பணியில் ஐரோப்பிய ஒன்றியமும் இணையவுள்ளது. ஆஸ்திரேலியாவும் தமது முழு ஒத்தழைப்பை வழங்கவுள்ளது.

ஹமாஸ் அமைப்பினரைத் தாக்கி வரும் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும் ஹமாஸிற்கு ஆதரவு தெரிவித்தும் ஹுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் வழியாக பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதலை முறியடிக்க அமெரிக்கா உள்ளிட்ட 37 நாடுகள் இணைந்து செங்கடலில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த கூட்டு பாதுகாப்பு நடவடிக்கைக்கு ஆஸ்திரேலியா படைகளை அனுப்பியுள்ளது. எனினும், அமெரிக்காவின் கோரிக்கையின் பிரகாரம் போர்க்கப்பலை அனுப்ப மறுத்துவிட்டது.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் செங்கடலில் கடற்படை நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஹுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் காரணமாக உலகளாவிய ரீதியில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம் நிலவுவதால், ஐரோப்பிய ஒன்றியம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

பெப்ரவரி 17 ஆம் திகதிக்குள் இந்த திட்டம் மேற்கொள்ளப்படும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கைகளுக்கான பிரதானி தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஏழு நாடுகள் கப்பல்கள் மற்றும் விமானங்களை வழங்க தயாராக உள்ளன. பெல்ஜியம் ஏற்கனவே போர்க்கப்பல்களை அனுப்ப முடிவு செய்துள்ளது. ஜெர்மனியும் போர்க்கப்பல்களை அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Latest Articles