பாகிஸ்தானில் நாளை தேர்தல்: இன்று இடம்பெற்ற இரட்டை குண்டு வெடிப்பில் 26 பேர் பலி!

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், இன்று இடம்பெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் 26 பேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பிஷின் என்ற நகரில் முதல் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.

சுயேட்சை வேட்பாளர் அஸ்பந்த்யார் காகர் என்பவரின் தேர்தல் அலுவலகத்துக்கு வெளியே இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 14 பேர் பலியாகினர் எனவும், 30 பேர் படுகாயமடைந்தனர் எனவும் பிஷின் நகர துணை காவல் ஆணையர் ஜூம்மா தாத் கான் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள கான்சாய் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முதல் குண்டுவெடிப்பு நிகழ்ந்த சிறிது நேரத்துக்குள் இரண்டாவது குண்டுவெடிப்பு அதே பலுசிஸ்தான் மாகாணத்தின் கிலா சைபுல்லா நகரில் இடம்பெற்றுள்ளது. இந்த குண்டுவெடிப்பு துருஐ-கு என்ற கட்சியின் தேர்தல் அலுவலகத்துக்கு வெளியே நிகழ்ந்துள்ளது. இதில், 12 பேர் பலியாகியுள்ளனர்.

இவ்விரு குண்டுவெடிப்புகளுக்கும் இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், பாகிஸ்தான் தாலிபன், பலுசிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகள் ஆகியவை இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.

பாகிஸ்தான் நாடாளுமன்றமான தேசிய அவைக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்ததை அடுத்து, இன்று நாடு முழுவதும் அமைதியாக உள்ளது. இந்நிலையில், இந்த இரட்டை குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. குண்டுவெடிப்புக்கு இடைக்கால அரசின் உள்துறை அமைச்சர் கோஹர் இஜாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles