“ கூச்சல் போடுவதால் மாத்திரம் திருடர்களைப் பிடிக்க முடியாது. திருடர்களைப் பிடிப்பதற்கு, வலுவான சட்ட விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகள் மற்றும் அறிவியல் முறைகள் தேவை.” – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று அரசின் கொள்கை விளக்க உரையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ இந்த நாட்டில் ஊழல் ஒரு சாபக்கேடாக மாறிவிட்டது என்பதை பலரும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், முறைமையான சட்ட விதிகளால் மாத்திரமே ஊழலை ஒழிக்க முடியும் என்பதை பலர் உணரவில்லை. திருடர்கயைப் பிடியுங்கள் என்று கூச்சல் போடுவதால் மாத்திரம் திருடர்களைப் பிடிக்க முடியாது.
திருடர்களைப் பிடிப்பதற்கு, வலுவான சட்ட விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகள் மற்றும் அறிவியல் முறைகள் தேவை. அவற்றை நடைமுறைப்படுத்தக்கூடிய பயிற்சி பெற்ற அதிகாரிகளும் தேவை.
ஊழல்வாதிகளை நீதியின் முன் நிறுத்தினால் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று பலர் நினைக்கிறார்கள். இது ஒரு மாயை. ஊழலைத் தடுக்கவும் கடுமையான சட்ட விதிமுறைகளை உருவாக்க வேண்டும். மேலும் ஊழல்வாதிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஊழலை ஒழிக்க இந்த இரண்டு விடயங்களும் ஒன்றாக செயல்படுத்தப்பட வேண்டும்.
அதற்காக, ஊழல் தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றினோம். தற்போது சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. அத்தகைய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் நாங்கள் ஒருபோதும் அரசியல் அல்லது பிற அழுத்தங்களைப் பிரயோகிக்க மாட்டோம். அது தற்போது நாட்டின் முன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.