நுவரெலியா நகரில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரிப்பு!

நுவரெலியா , மாநகரில் அதிகரித்து வரும் கட்டாகாளி நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நுவரெலியா பிரதான நகரில் பஸ்தரிப்பு நிலையம் மற்றும் மக்கள் அதிகளவில் பாவிக்கும் குறுக்கு வீதிகள் என பல இடங்களில் கட்டாகாளி நாய்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து பொது மக்கள் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்து வருகின்றன. அத்துடன், பொது மக்கள் நாய்கடிக்கு இலக்காகும் அச்சுறுத்தலும் காணப்படுகின்றது.

மேலும் பிரதான பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஸ்களின் அருகில் சென்று இந்த கட்டாகாளி நாய்கள் சிறுநீர் கழிப்பது , நகரில் மக்கள் பயணிக்கும் வீதிகளில் மலம் கழிப்பது என காணக்கூடிய நிலையில் நகரின் சுற்று சூழல் மாசடைவதையும் அவதானிக்க கூடியதாக இருக்கிறது.

அதேநேரத்தில் நுவரெலியா மற்றும் கந்தப்பளை நகரங்களில் நாய்களின் இன பெருக்கத்தை அதிகரித்து வருகின்றது. இது குறித்து நுவரெலியா பொது சுகாதார பரிசோதக காரியாலயம் மற்றும் நுவரெலியா மாநகர சபை பொது சுகாதார பிரிவு பரிசோதகர்களும் அவதானித்துள்ளனர்.

அத்துடன் நகரில் அழைந்து திரியும் அனைத்து கட்டாகாளி நாய்களுக்கும் நீர் வெறுப்பு ஊசிகள் செலுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா நகரில் கட்டாகாளி நாய்கள் பொது மக்களுக்கு அசௌகரீகங்களை ஏற்படுத்துவதுடன் அச்சத்தையும் ஏற்படுத்துவதாக நுவரெலியா மாநகர சபையில் இயங்கும் பொது சுகாதார பரிசோதக அதிகாரிகள் மாநகர சபை ஆணையாளர் மற்றும் மாவட்ட செயலாளரின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளதாக அறிய முடிகிறது.

அதேநேரத்தில் நுவரெலியா நகரம் சுற்றுலா நகரம் என்பதனால் அதிகளவில் வெளி நாட்டவர்கள் வருகை தருவது வழமையாகும் இந்த நிலையில் இவ்வாறு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கட்டா காளி நாய்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் திணைக்களங்கள் காலம் தாழ்த்தாது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் நுவரெலியா வசந்த கால நிகழ்வு ஆரம்பிக்கும் முன் நகரில் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆ.ரமேஸ்.

Related Articles

Latest Articles