“ மலையகத்தில் நிச்சயம் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவோம். அரசியல், சமூக மற்றும் பொருளாதார உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.”
இவ்வாறு இதொகாவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் தோட்டத் தொழிலாளர்களுக்காக 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் ‘பாரத் – லங்கா’ வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து நேற்று (19) நிகழ்நிலை மூலம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,
“ இந்தத் திட்டம் வெறும் 1300 வீடுகளைக் கொண்ட திட்டம் அல்ல. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் பின்னர் எமக்கு வழங்க உறுதியளிக்கப்பட்ட 10,000 வீடுகள் திட்டத்தின் அங்குரார்ப்பணம் இது.
இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கான அர்ப்பணிப்புக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எமது நீண்டநாள் கனவு இன்று நனவாகிறது. நாடு பொருளாதார நெருக்கடியையும் அரசியல் நெருக்கடியும் எதிர்கொண்டது. அரசியல் சிக்கல் ஏற்பட்ட போது ரணில் விக்ரமசிங்க மாத்திரம் தான் நாட்டைக் கட்டியெழுப்ப முன்வந்தார். நாட்டின் ஜனாதிபதியாக எமது ஆதரவையும் அவர் கோரினார்.
10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை மீள ஆரம்பிப்பதற்கான சூழலை உருவாக்குமாறு ஜனாதிபதியிடம் கோரியிருந்தேன். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பி, நமக்கு ஒரு விடிவைத் தந்திருக்கிறார்.
நான் அமைச்சுப் பொறுப்பை ஏற்ற போது 100 வீடுகளைக் கட்டக் கூட நிதி இருக்கவில்லை. ஆனால் இன்று 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை ஆரம்பிக்க முடிந்ததை பெருமையாக கருதுகிறேன். மக்களுக்கு காணி உறுதியைப் பெற்றுக் கொடுக்கும் திட்டத்திற்கு ஜனாதிபதி 4 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளார். அதற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.” என்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
