நெருக்கடிக்கு மத்தியில் மக்களுக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதியினால் மூன்று மாதங்களுக்கு 100 பில்லியன் ரூபா நிவாரணப் பொதி
மே இறுதி வரை தடையற்ற வலுசக்தி மற்றும் எரிபொருள் விநியோகம் உறுதி செய்யப்படும்
டீசல் மற்றும் பெட்ரோல் மானியத்திற்காக அரசாங்கத்தினால் 6,000 கோடி ரூபா
அந்த நிவாரணத்திற்கு மேலதிகமாக, மீனவ சமூகத்திற்கு சாதாரண படகு ஒன்றிற்கு மாதம் 31,250 ரூபா வீதமும், பலநாற் படகு ஒன்றிற்கு 150,000 ரூபா வீதமும் எரிபொருள் கொடுப்பனவுகள் வழங்கப்படும்
ஒரு மூட்டை யூரியா உரம் 10,200 ரூபா என்ற நிலையான விலையில்
இதற்காக அரசாங்கத்தினால் 1.7 பில்லியன் ரூபா
சிறுபோக நெல் விவசாயத்திற்கான உர மானியம் 25,000 ரூபா இலிருந்து 30,000 ரூபா வரை அதிகரிப்பு
மேலதிக பயிர்ச் செய்கைக்காக வழங்கப்படும் 15,000 ரூபா உர மானியம் 18,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது
90 அலகுகளுக்கும் குறைவான மின்சாரக் கட்டணப் பட்டியல்களுக்கு மானியம்.
அதற்காக மாதம் 500 ரூபா கோடி வீதம் 3 மாதங்களுக்கு 1,500 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது
ஏப்ரல் மாதத்தில் 17,500 ரூபா அஸ்வெசும கொடுப்பனவு 25,000 ரூபாவாக அதிகரிப்பு
10,000 ரூபா கொடுப்பனவு 15,000 ரூபாவாகவும்,
5,000 ரூபா கொடுப்பனவு 7,500 ரூபாவாகவும் அதிகரிப்பு
இந்தச் சலுகைகள், பணத்தை அச்சிட்டோ அல்லது கடன் பெற்றோ வழங்கப்படவில்லை. மாறாக, பெற்றுள்ள பொருளாதார ஸ்திரத்தன்மையை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதன் மூலமே இவை வழங்கப்படுகின்றன.
– ஜனாதிபதிபாராளுமன்றத்தில் வலியுறுத்தல்
புதிய பொருளாதார நிவாரணப் பொதியை சமர்ப்பித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று 2026-04-07 பாராளுமன்றத்தில் ஆற்றிய முழுமையான உரை
மத்திய கிழக்கு யுத்த நிலைமையுடன் நாட்டின் பல துறைகளில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்படும் துறைகள் குறித்து கவனம் செலுத்தி சில மானியங்களை வழங்குவது குறித்து கவனம் செலுத்தியுள்ளோம்.
எரிபொருள் மற்றும் வலுசக்தி துறைகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எரிபொருளை செலவுக்கு ஏற்ப சந்தையில் விற்பனை செய்யுமாறு ஒரு பரிந்துரை முன்வைக்கப்பட்டது. எரிபொருளுக்கான செலவை பாராது மானியம் வழங்குமாறு மற்றொரு பரிந்துரை முன்வைக்கப்பட்டது.
முதலாவது பரிந்துரையை அமுல்படுத்துவதால் திறைசேரிக்கும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் மின்சார சபைக்கும் பாதிப்பு ஏற்படாது.
ஆனால் பொருளாதாரத்திற்கும் கைத்தொழில்களுக்கும் வர்த்தகர்களுக்கம் அன்றாட வாழ்விற்கும் தாக்கம் ஏற்படும். எரிபொருள் உயர்வுக்கு அமைவாக சந்தை விலைக்கமைய வழங்கினால் ஒரு லீட்டர் டீசலை 600 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்ய வேண்டும். அதில் 50 ரூபா வரி உள்ளது. இதனை நீக்கினால் லீட்டருக்கு 50 ரூபா தான் கட்டணம் குறையும்.
வரியை மாற்றாமல் விற்கும் ஒவ்வொரு லீட்டர் டீசலுக்கும்
100 ரூபா வரை திறைசேரியில் ஒதுக்க இருக்கிறோம். எரிபொருள் செலவை முந்தைய மாத எரிபொருள் விலையுடன் ஒப்பிட்டு டீசலுக்கு 100 ரூபா வரை மானியம் வழங்கலாம் . பெற்றோலுக்கு 20 ரூபா மானியம் வழங்கப்படும். 3 மாதத்திற்கான பரிந்துரைகளை தயாரித்துள்ளோம். தெரிவு செய்யப்பட்ட தரப்பினருக்கே இந்த மானியம் வழங்க வேண்டும். சாதாரண ஒருவர் 10 லீட்டர் எரிபொருள் பெற்றோல் அவருக்கு 1000 ரூபா மானியம் கிடைக்கும். அதிக எரிபொருள் பயன்படுத்தும் வாகனம் உள்ள ஒருவர் 100 லீட்டர் பெற்றால் அவருக்கு 10 000 ரூபா சலுகை கிடைக்கும். ஆனால் இதற்காக எம்மிடம் முறையான தரவுகள் கிடையாது. அதனால் தான் சுப்பர் டீசல் மற்றும் சுப்பர் பெற்றோல் விலைகளை சந்தை விலைக்கு ஏற்ப தீர்மானிக்க முடிவு செய்தோம்.
ஏனைய வாகனங்கள் பயன்படுத்துவோர் தொடர்பில் இவ்வாறு தீர்மானம் எடுக்க முடியாதுள்ளது. எனவே ஒவ்வொரு டீசல் லீட்டருக்கும் 100 ரூபா செலவை அரசாங்கம் பொறுப்பேற்கிறது. ஒரு மாதத்திற்கு 2000 கோடி ரூபா செலவாகிறது. மூன்று மாதத்திற்கு இந்த திட்டத்தை தயாரித்துள்ளோம். டீசல் மற்றும் பெற்றோல் மானியத்திற்காக நாம் 6000 கோடி ரூபா ஒதுக்குகிறோம். முழுச் சுமையையும் மக்கள் மீது ஏற்றாதிருக்க இந்த நடவடிக்கை முக்கியமாக அமையும்.
தெரிவு செய்யப்பட்ட மக்கள் குழுவினருற்கு குறிப்பாக எரிபொருளை தமது பொருளாதாரத்தில் பிரதான அம்சமாகக் கொண்டுள்ள மீனவர்களுக்கு இந்த நிவாரணத்திற்கு மேலதிகமாக சலுகை வழங்க முடியுமா என ஆராய்ந்தோம். சாதாரண எஞ்சின் கொண்ட படகிற்காக எத்தகைய எரிபொருளை பயன்படுத்தினாலும் அதற்காக100 ரூபா நிவாரணத்திற்கு மேலதிகமாக மேலும் 50 ரூபா சலுகை வழங்கப்படும். ஒரு நாளைக்கு 25 லீட்டர் வீதம் 25 நாட்களுக்கு 50 ரூபா குறைந்த விலையில் 625 லீட்டர் வழங்கப்படும். 31 250 ரூபா மாதாந்தம் சாதாரண படகு வைத்துள்ளோருக்கு வழங்கப்படும். அந்தத் தொகை வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்படும். பல நாள் மீன்பிடிப் படகுகள் 3 மாதத்திற்கு ஒரு தடவை கடலுக்கு செல்லும். பல நாள் மீன் பிடிப் படகுக்கு ஒன்றரை இலட்சம் ரூபா எரிபொருள் நிவாரணம் ஒரு தடவை மாத்திரம் வழங்கப்படும்.
அடுத்து யூரியா பசளை தொடர்பான பிரச்சினை காணப்படுகிறது. பழைய விலைக்கு தருவித்த பசளை கமநல நிலையங்களில் உள்ளன. பழைய விலைக்கு தருவித்த 14 000 மெற்றிக் தொன் பசளை எம்மிடம் இருந்தது. தங்களிடம் உள்ள பசளைகளில் 65 வீதத்தை பழைய விலையில் கமலந நிலையங்களுக்கு வழங்க கம்பனிகள் உடன்பட்டன. மீள கலந்துரையாடியதில் தங்களிடமுள்ள அனைத்து பசளைகளையும் பழைய விலைக்கு வழங்க உடன்பாடு எட்டப்பட்டது. அந்த யூரியா பசளையை இரு பருவங்களுக்கே பயன்படுத்த முடியும். மூன்றாவது பருவத்திற்காக அதிக விலைக்கு வாங்க வேண்டியுள்ளது.
நேற்று மற்றொரு கப்பல் வந்தது. அதில் 4 வியாபாரிகளின் பசளை இருந்தது. அதில் நான்கு விலைகளில் பசளை உள்ளன. தொன் ஒன்றுக்கு 680 டொலரில் இருந்து 850 வரை பல்வேறு பட்ட விலைகளில் உள்ளன. 3 ஆவது பருவத்திற்கும் 10,200 ரூபாவிற்கே பசளை வழங்க முடிவு செய்துள்ளோம். கம்பனிகளிடம் இருந்து பசளையைப் பெற்று உத்தரவாத விலைக்கு வழங்க இருக்கிறோம். கம்பனிகளிடம் இருந்து பெறும் 13 500 முதல் 14 000 ரூபா வரை இருக்கும். சுமார் 3000 ரூபா மேலதிக செலவை அரசாங்கம் ஏற்கும். சுமார் 1.7 பில்லியன் ரூபா அதற்காக செலாவாகும்.சிறுபோகத்தில் யூரியா பசளை உரியவாறு வழங்கப்படும்.
பசளை விலை உயர்வு மற்றும் எரிபொருள் விலை உயர்வு என்பன விவசாயிகளுக்கு தாக்கம் ஏற்படுத்துவது குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது. விவசாயிகள் பயிரிடும் பயிர் என்ன? நெல்லா அல்லது மாற்றுப் பயிற் செய்கையா என ஆராய்ந்தே பசளை வழங்கப்படும். பசளையை அடிப்படையாகக் கொண்டு மேலும் நிவாரணம் வழங்க முடிவு செய்துள்ளோம்.
நெல்பயிரிடுவதாக இருந்தால் தற்பொழுது 25 000 ரூபா பசளை நிவாரணம் வழங்கப்படுகிறது. மாற்றுப் பயிற்செய்கையாயின் 15 000 ரூபா பசளை நிவாரணம் வழங்கப்படுகிறது. அவர்கள் பயிரிடும் பயிர் மற்றும் நிலத்தின் அளவுக்கு அமைவாக நிவாரணம் வழங்கப்படுகிறது. நெற் பயிற்செய்கைக்கான 25 000 ஆக உள்ள பசளை நிவாரணத்தை 30,000 ரூபாவாக அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். சிறு போகத்தில் மாற்றுப் பயிற்செய்கை அதிகமாக மேற்கொள்ளப்படுகிறது. அதற்காக வழங்கும் பசளை நிவாரணத்தை 15 000 ரூபாவில் இருந்து 18 000 ஆக அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.
தேயிலை பயிற்செய்கைக்காக ஒரு பசளை பொதிக்காக 4000 ரூபா நிவாரணம் வழங்கி வருகிறோம். பசசை பொதிக்காக ஒரு தடவை மாத்திரம் 5000 ரூபா நிவாரணமொன்றை வழங்க இருக்கிறோம். பசளை நிவாரணத்திற்காக 6500 மில்லியன் ரூபா செலவாகிறது.
குறைந்த வருமானம் பெறுவோருக்கு எவ்வாறு நிவாணம் வழங்கலாம்? 17 500 ரூபா அஸ்வெசும கொடுப்பனவை 25 000 வரை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். 10,000 அஸ்வெசும கொடுப்பனவு 15,000 ரூபாவாக அதிகரிக்கப்படும். ஏனைய அஸ்வெசும பயனாளர்களுக்கான கொடுப்பனவு 2500 ரூபாவினால் அதிகரிக்கப்படும். பண்டிகை காலம் என்பதால் ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் இந்த அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு வழங்கப்படும். இதற்காக 8500 மில்லியன் ரூபா மேலதிகமாக செலவிடப்படும்.
மின்கட்டண பிரச்சினை மூன்று வகைகளில் ஏற்படுகிறது. நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் கூடுதலாக அனல் மின் ஊடாக மின்உற்பத்தி செய்ய நேர்ந்துள்ளது. இரண்டாவதாக டீசல், நெப்டா மற்றும் ஏனைய எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. நிலக்கரியின் தரம் குறைந்துள்ளதால் மின் உற்பத்தி ஒரளவு குறைந்துள்ளதால் ஏனைய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை பெறுகையில் ஏற்படும் மேலதிக செலவு மூன்றாவது விடயமாகும்.
மத்திய கிழக்கில் இருந்தே மசகு எண்ணெய் பெறப்படுகிறது. அவை வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளன . எதிர்வரும் 16 – 17 அளவில் தான் அடுத்த கப்பல் வர உள்ளது. இதனால் எரிபொருள் சுத்திகரிப்பிற்கு தாக்கம் ஏற்படும். இதனால் சில நாட்களுக்கு சுத்திகரிப்பு நிலையத்தை மூட நேரிடும். இங்கிருந்து தான் நெப்தா மற்றும் உராய்வு நீக்கி எண்ணெய் கிடைக்கிறது. நெப்டா மற்றும் உராய்வு நீக்கி எண்ணெய்யில் தான் மின்உற்பத்தி நிலையங்கள் இயங்குகின்றன.
இந்த தாக்கத்தை முன்கூட்ட அறிந்ததால் உராய்வு நீக்கி எண்ணெய் தருவிக்க நடவடிக்கை எடுத்தோம். 13-15 ஆம் திகதிகளில் உராய்வு நீக்கி எண்ணெய் கப்பல் வருகிறது. இறக்குமதி செய்யும் உராய்வு நீக்கி எண்ணெய் ஊடான மின் உற்பத்தி செய்வதற்கு அதிகம் செலவாகிறது. சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டு நெப்தா பெறுவது தடைப்பட்டால் டீசல் ஊடாக மின்உற்பத்தி செய்ய நேரிடும். இந்த நிலையில் மின்கட்டணத்திற்கு மேலதிக தாக்கம் ஏற்படும்.
கப்பல் பாதைகள் மற்றும் துறைமுகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் மசுகு எண்ணெய் தருவிப்பதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. நெப்தா இல்லாததால் உராய்வு நீக்கி எண்ணெய்க்கு பதிலாக டீசல் ஊடாக உற்பத்தி செய்ய நேரிடும். இதனால் மின் உற்பத்தி செலவு உயரும். இவ்வாறு பல வழிகளில் மின்உற்பத்தி செலவுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
அனல் மின் உற்பத்தி கூடிக் குறைகிறது. 900 மெகா வோர்ட் மின் உற்பத்தி நிலையம் உருவாக்கினாலும் 810 மெகா வோர்ட் மின்சாரமே கிடைக்கிறது. நிலக்கரியும் தரம் தொடர்பான பிரச்சினை உள்ளது. டெண்டர் வழங்குவதில் எந்த பிரச்சினையும் கிடையாது. விநியோக நிறுவனம் உரிய தரத்தில் அதனை வழங்கவில்லை. உரிய ஆய்வு கூடங்களில் தான் நிலக்கரி பரிசோதிக்கப்படுகிறது. கப்பலில் ஏற்றுவதற்கு முன்னர் அறிக்கை வழங்கப்படுகிறது. குறைபாடு இல்லை என அறிக்கை கிடைத்தும் 80 வீத கொடுப்பனவு வழங்கப்படுகிறது. இந்திய ஆய்வு கூடமொன்றில் ஆய்வு செய்த பின்னர் 20 வீத கொடுப்பனவு வழங்கப்படுகிறது. இரு பரிசோதனைகளிலும் நிலக்கரியும் தரம் உறுதிப்படுத்தப்படுகிறது. 3 கப்பல்களில் எடுத்து வரப்பட்ட நிலக்கரி உரிய தரத்தில் இருக்கவில்லை. அறிக்கையில் தரமானது என உறுதிப்படுத்தப்பட்டாலும் எதிர்பார்த்த மின் உற்பத்தி கிடைப்பதில்லை என உற்பத்தி நிலைய நிர்வாகத்தினால் தெரிவிக்கப்படுகிறது. அதனால் சில நிறுவனங்களுக்கு 20 வீத கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளது. சிலவற்றுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சில கப்பல்களுக்க 80 வீத கொடுப்பனவு செலுத்தப்படவில்லை.
தரமற்ற நிலக்கரியினால் டீசல் ஊடாக உற்பத்தி செய்ய நேரிடுகின்ற மேலதிக செலவு சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து அறவிடப்படும். எக்காரணம் கொண்டும் இந்த மேலதிக செலவை சாதாரண மக்களின் மின்கட்டணத்தில் சேர்க்க மாட்டோம். இது எமது அரசாங்கம் . கம்பனிகளின் அரசாங்கங்கள் தான் அவ்வாறு செய்யும். கம்பனிகளுக்கு எதிராக பாரிய அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்தாவிட்டால் வழக்குத் தொடரப்படும். பாவனையாளர்களின் கட்டணத்தில் சேர்க்க மாட்டோம்.
ஆனால் எரிபொருள் விலை உயர்வு, நெப்தா மற்றும் உராய்வு நீக்கி எண்ணெய்க்குப் பதிலாக டீசல் ஊடாக மின்உற்பத்தி செய்ய நேரிட்டமை, நீர்த்தேக்க நீர்மட்ட வீழ்ச்சி என்பவற்றினால் மின்கட்டணத்திற்கு தாக்கம் ஏற்படும். இதன் போது தெரிவு செய்யப்பட்ட இலக்கிடப்பட்ட குழுக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இந்த நிலைமையினால் ஏப்ரல் மாத கட்டணம் அதிகரிக்கப்படவில்லை. பெப்ரவரி மாதம் மேற்கொண்ட கருதுகோளுக்கு அமைய இந்த அதிகரிப்பு செய்யப்பட்டது. முதல் 30 அலகுகளுக்காக 15 ரூபா அதிகரிப்பு செய்யப்பட்டது. ஒரு நாளைக்கு 50 சதம் தான் அதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்த அலகுகளுக்கு ஒரு ரூபாவும் அடுத்த அலகுகளுக்கு 1.50 ரூபா தான் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது எழுந்துள்ள நெருக்கடியினால் பல வழிகளில் தாக்கம் ஏற்படும். அந்த சுமையை மின்சார சபை முழுமையாக ஏற்கலாம். அல்லது திறைசேரி ஏற்கலாம். இன்றேல் மக்கள் மீது ஏற்றலாம். இந்த நிலையில் அதில் ஒரு பகுதி அரசாங்கமும் ஒரு பகுதியை பொதுமக்களும் ஒரு பகுதியை நிறுவனமும் ஏற்பதென முடிவு செய்துள்ளோம். தரம் குறைவான நிலக்கரியினால் ஏற்பட்ட பாதிப்பை நிறுவனம் ஏற்க வேண்டும். அதனை மக்கள் மீது ஏற்ற மாட்டோம்.
90 அலகுகளை விட குறைவாக பயன்படுத்துவோருக்கு அடுத்த கட்டண மாற்றத்தின் போது நிவாரணம் வழங்க இருக்கிறோம். ஒரு மாதத்திற்கு 500 கோடி ரூபா வீதம் 3 மாதங்களுக்கு 1500 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
3 மாதங்களுக்கும் 32 பில்லியன் நட்டம் ஏற்படும் என கணிப்பிடப்பட்டுள்ளது. அதில் 15 பில்லியனை அரசாங்கம் ஏற்கும். 7 பில்லியன் ரூபா நிலக்கரி விடயத்தினால் தாக்கம் ஏற்படும். அதனை மீள அறவிடுவோம். சுமார் 10 பில்லியன் ரூபாவினை மின் கட்டணத்தில் சேர்க்க நேரிடும். இதனை விட மாற்று வழிகள் இருந்தால் முன்வையுங்கள்.
இந்த நெருக்கடி இதே போன்று 2022 ஆம் ஆண்டிலும் உருவானது. ஐந்தாயிரம் ரூபாய் நாணயத் தாள்களை அச்சிட்டு விநியோகித்தனர். அதன் பிறகு பணவீக்கம் 70% வரை உயர்ந்தது. சந்தையில் புழக்கத்திற்காக பெருமளவிலான பணம் வெளியிடப்பட்டது. வட்டி விகிதம் 33% ஆக உயர்ந்தது. ஓ.டி (O.D) வட்டி 38% ஆக அதிகரித்தது. பிணைமுறி வட்டி விகிதம் 30% இனைத் தாண்டியது.
பணவீக்கம், வங்கி வட்டி விகிதம், மக்களின் கொள்வனவு சக்தி, திறைசேரியினால் தாங்கிக்கொள்ளக்கூடிய அளவு என அனைத்தையும் கருத்திற்கொண்டே இந்த முறையான திட்டத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
டித்வா அழிவுகளின் போது மேலதிகமாக மக்களின் தேவைகளுக்காக நாங்கள் 50,000 கோடி ரூபாயை ஒதுக்கினோம். அதேபோல், இந்த அனர்த்தத்திற்கு மத்தியில் நான் முன்வைத்த நிவாரணப் பொதி தொடர்பான முன்மொழிவுகளில் 100 பில்லியன் ரூபாய் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் மக்களுக்கு நாம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். மக்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அதற்காக எம்மால் தாங்கிக்கொள்ளக்கூடிய வகையில் 100 பில்லியன் ரூபாய் செலவீனத்தை மூன்று மாதங்களுக்கு நாங்கள் முன்வைத்துள்ளோம். எனினும், இந்த நிலைமை மேலும் தீவிரமடைந்தால், மீண்டும் புதிய முன்மொழிவுகளை முன்வைப்போம். வங்கி வட்டி விகிதத்தை 10% க்கும் குறைவாகவும், பணவீக்கத்தை 5% க்கும் குறைவாகவும் பேணுவதற்கு நாங்கள் முயற்சி செய்கிறோம். டொலரின் மதிப்பு உயர்ந்தால், அது மீண்டும் எமக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தற்போதுள்ள நிலைமைக்கு ஏற்பவே நாங்கள் நிவாரணங்களை வழங்கியுள்ளோம். மே மாத இறுதி வரை தடையற்ற மின்சாரம் மற்றும் தடையற்ற எரிபொருள் விநியோகத்தை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். அதற்காக எரிபொருள் மானியத்தை வழங்குகிறோம்.
பிரதமர் மோடியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், எரிபொருள் வழங்குவதற்கு இணக்கம் தெரவிக்கப்பட்டுள்ளது. அதற்காக நாம் பிரதமர் மோடிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோன்று, சீன அரசாங்கமும் நமக்கு ஒரு குறிப்பிட்ட அளவு டீசல் மற்றும் பெட்ரோல் எரிபொருளை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளது. சீன தூதுவர் சீனாவுக்குச் சென்று அந்நாட்டு அரசாங்கத்துடன் கலந்துரையாடி அது குறித்து எமக்கு அறிவித்துள்ளார்.
ரஷ்ய அரசாங்கமும் எமக்கு எரிபொருள் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது. அண்மையில் ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர் இந்நாட்டிற்கு வருகை தந்து அது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதேபோன்று ரஷ்ய வெளியுறவுத்துறை பிரதி அமைச்சரும் இலங்கைக்கு வருகை தந்து எம்முடன் கலந்துரையாடினார். அவர்கள் எமக்கு எரிபொருள் வழங்கத் தயாராக உள்ளனர்.
ரஷ்யாவுடன் ஏப்ரல் 11 வரை கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ட்ரம்ப் எமக்கு அனுமதி வழங்கியுள்ளார். அது மேலும் நீடிக்கப்படுமா இல்லையா என்பது எமக்குத் தெரியாது. எப்படியிருந்தாலும், இராஜதந்திர ரீதியாக இந்த எரிபொருள் விநியோகத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான தலையீடுகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.
அதேபோல், இந்த கொள்வனவுகளை மேற்கொள்வதற்கு சர்வதேச வங்கிகளின் உடன்பாடு இருக்க வேண்டும். இது எமக்கு மாத்திரமல்ல, உலகின் எந்தவொரு நாட்டிற்கும் பொருந்தும். ஒரு அரசாங்கம் என்ற வகையில், தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்திற்காக நீங்கள் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் முன்வைக்கும் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளையும் கருத்திற் கொண்டு, தேவையான இராஜதந்திர ரீதியிலான தலையீடுகளை நாங்கள் மேற்கொள்கிறோம்.
ரூபாவின் பெறுமதி ஒரு குறிப்பிட்ட அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்களில் குறைவு இல்லை. ஏனைய ஒவ்வொரு மார்ச் மாதத்தையும் விட, இந்த வருட மார்ச் மாதத்தில் கிடைத்துள்ள வெளிநாட்டுப் பணப்பரிமாற்றத்தின் அளவு அதிகம். சுற்றுலாத் துறையின் பருவகாலம் முடிவடைந்து கொண்டிருந்தது. தற்போது சுற்றுலாப் பயணிகள் போர் நடைபெறும் பிராந்தியங்களிலிருந்து அல்லாமல், மற்றைய பக்கங்களிலிருந்தே வருகின்றனர். நாம் மார்ச் மாதத்தில் மூன்று இலட்சம் சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்த்த போதிலும், சுமார் 150,000 பேரே வந்துள்ளனர். எனவே அதில் ஒரு குறைவு உள்ளது. அதன் மூலம் கிடைக்கும் வெளிநாட்டு வருமானத்திலும் குறைவு ஏற்பட்டுள்ளது.
நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் மிகவும் சிறந்ததொரு கலந்துரையாடலை நடத்தியுள்ளோம். பாராளுமன்றத்தின் கட்சித் தலைவர்களுடன் சர்வதேச நாணய நிதியம் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தது. சபாநாயகர் கட்சித் தலைவர்களின் நீண்ட பட்டியலொன்றை அனுப்பியிருந்தார். எனினும், நான்கு பேர் வரையே வந்திருந்ததாக அறியக்கிடைத்தது.
எந்தவொரு கட்சியும் அந்தப் பேச்சுவார்த்தையைப் புறக்கணிக்க முடியும். அது அவர்களின் உரிமை. ஆனால் நாம் மிகவும் பயனுள்ள கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளோம். எதிர்வரும் வியாழக்கிழமையாகும்போது பணியாளர் மட்டத்திலான உடன்படிக்கையை இங்கேயே கைச்சாத்திட நாம் முயற்சி செய்கிறோம். வழக்கமாக இங்கு பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, உடன்படிக்கையில் கைச்சாத்திட நாம் அங்கு செல்ல வேண்டும். ஆனால் இம்முறை இங்கேயே கைச்சாத்திடுவதற்கான தயார் நிலைமைகள் உள்ளன. அதன் மூலம் ஐந்து மற்றும் ஆறாவது தவணைகள் ஆகிய இரண்டும் ஒன்றாகக் கிடைக்கும். அவ்வாறு நடந்தால், மே மாத இறுதிக்குள் 700 மில்லியன் டொலர்கள் கிடைக்கும்.
மேலும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் குழுவொன்று கடந்த நாட்களில் இலங்கைக்கு வருகை தந்திருந்தது. அவர்கள் இந்த வருடத்திற்குள் 1.2 பில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். அத்துடன் உலக வங்கியிடமிருந்தும் சில நிதியுதவிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெளிநாட்டு கையிருப்பு குறைவடைவதற்கான அபாயம் குறைவாகவே உள்ளது. நாம் சந்தையிலிருந்து கொள்வனவு செய்வதைக் குறைத்துள்ளோம். இருப்பினும், நாம் கடன் தவணைகளைச் செலுத்த வேண்டியுள்ளது. இதன் காரணமாக மே மாத இறுதியில் வெளிநாட்டு கையிருப்பில் ஒரு வீழ்ச்சி ஏற்படக்கூடும். ஆனால் சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கிடைக்கும் நிதியுதவிகள் மூலம் இதனை மாற்றியமைக்க முடியும்.
ரூபாவின் பெறுமதியில் ஓரளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஏனைய நாடுகளின் நாணயங்கள் பெறுமதி குறைவடைவதோடு ஒப்பிடுகையில், எமது ரூபாவின் பெறுமதி தற்போதைக்கு மிகக் குறைந்த அளவிலேயே வீழ்ச்சியடைந்துள்ளது. பண்டிகைக் காலம் என்பதால் எமது இறக்குமதிச் செலவுகள் சற்று அதிகமாக உள்ளன. இது பத்தாம் திகதிக்குப் பிறகு குறைவடையும். மீண்டும் இறக்குமதிச் செலவுகள் மே மாத நடுப்பகுதியிலேயே அதிகரிக்கும். இதற்கு இடைப்பட்ட காலத்தில் எம்மால் ஒரு சமநிலையைப் பேண முடியும் என நினைக்கிறேன். இருப்பினும், எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக எமக்கு சுமார் 1.5 பில்லியன் டொலர் மேலதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் உங்கள் அனைவரிடமும் எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். அதன் மூலம் எரிபொருள் இறக்குமதியைக் குறைக்க முடியும். இதே நிலை நீடித்தால், அது டொலரின் பெறுமதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
எரிவாயு பிரச்சினை நிலவுகிறது. அபாயம் அதிகரித்துள்ளதால், எரிவாயுவின் பிரீமியம் விலை உயர்ந்துள்ளது. இருப்பினும், நாங்கள் தொடர்ச்சியாக எரிவாயுவை விநியோகித்து வருகிறோம். தனியார் நிறுவனத்தின் பிரச்சினை ஏற்படலாம். அதேபோல், எரிபொருள் விநியோகிக்கும் இன்னும் மூன்று நிறுவனங்கள் உள்ளன. அவற்றின் விலையைத் தீர்மானிக்கும் உரிமையை வெளிப்படையான சந்தைக்கு விடுமாறு நீங்களும் முன்மொழிந்திருந்தீர்கள். நாம் சூப்பர் டீசல் மற்றும் சூப்பர் பெட்ரோல் ஆகியவற்றின் விலையைத் தீர்மானிக்கும் உரிமையை சந்தைக்கு வழங்கினோம். தற்போது அவர்கள் விலையை அதிகரித்துள்ளனர். அதுதான் உண்மையான விலை. அரசாங்கத்திடம் எரிபொருள் விநியோகச் சந்தையின் 57% மாத்திரமே உள்ளது. அதற்குள்ளேயே நாம் இதனை முகாமைத்துவம் செய்ய வேண்டியுள்ளது. இந்த நிறுவனங்களுக்கும் எமக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்தால் ஏற்படக்கூடிய நிலைமைகள் குறித்தும் நாம் சிந்தித்து வருகிறோம். தற்போது எரிபொருள், உரம் மற்றும் எரிவாயு ஆகியவற்றிற்காக மூன்று மாத காலத் திட்டம் ஒன்றைத் தயாரித்துள்ளோம். அதற்குப் பின்னர் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு மீண்டும் கலந்துரையாட வேண்டும். அதற்காக உங்களது கருத்துக்கள், முன்மொழிவுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் முன்வையுங்கள். அவற்றை ஆராய்வதற்கு நாம் தயாராக உள்ளோம்.










