மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் ஆன்மீக மற்றும் அறநெறி கல்வியை முறையாகக் கற்றுக்கொள்வதில் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். எனவே, அறநெறிப் பாடசாலைகளை மேம்படுத்தும் வகையில், பெருந்தோட்டப் பகுதிகளில் புதிய அறநெறிப் பாடசாலைகளை அமைப்பதற்கு தலா 20 முதல் 30 பேர்ச்சஸ் காணி ஒதுக்கீட்டை பெற்றுத்தருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக மக்கள் முன்னணியின் கேகாலை மாவட்ட தெஹியோவிற்ற பிரதேச சபை உறுப்பினர் செவனையா சற்குணராஜா, (ஜூலை 14, 2026 அன்று) நடைபெற்ற பிரதேச சபையின் மாதாந்த அமர்வின் போதே இக்கோரிக்கையை முன்வைத்தார்.
அவர் சபையில் மேலும் உரையாற்றுகையில்,
“மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் பிள்ளைகள் தங்களது அறநெறி கல்வியைத் தொடர்வதில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதியீனங்களையும், சவால்களையும் எதிர்கொண்டு வருகின்றனர். எமது பிள்ளைகளின் நற்பண்புகளையும் ஒழுக்க விழுமியங்களையும் வளர்ப்பதற்கு அறநெறி கல்வி இன்றியமையாததாகும்.
எனவே, இந்த அறநெறிப் பாடசாலைகளை முறையாக மேம்படுத்துவதற்கும், புதிய கட்டிடங்களை அமைப்பதற்கும் பெருந்தோட்டப் பகுதிகளில் தலா 20 முதல் 30 பேர்ச்சஸ் காணியை அரசு ஒதுக்கீடு செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.










