“கதிர்காம கந்தனுக்கு அரோகரா” என்ற பக்தி முழக்கத்துடன், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது மஸ்கெலியா பகுதிகளைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கதிர்காமம் நோக்கிய தங்களது புனித பாதயாத்திரையை இன்று (04) மாலை 3.30 மணியளவில் ஆரம்பித்தனர்.
மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாத சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற விசேட வழிபாடுகளைத் தொடர்ந்து, ‘செல்வம்’ என்பவரின் தலைமையில் இந்த பாதயாத்திரைக் குழுவினர் தங்களது நடைபயணத்தைத் தொடங்கினர்.
இக்குழுவில் மறே, நல்லதண்ணி, சாமிமலை மற்றும் மஸ்கெலியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் இணைந்துள்ளனர்.
இன்று மாலை இப்பகுதியில் பலத்த மழை பெய்து வந்த போதிலும், அதனைக் கடந்து பக்தர்கள் மிகுந்த பக்திப் பெருக்குடன் நடைபயணத்தை மேற்கொண்டனர்.
இன்றைய தினத்திற்குள் கொட்டும் மழையிலும் நோர்வூட் மற்றும் டிக்கோயா நகரங்களை சென்றடையும் இக்குழுவினர், அங்குள்ள அம்மன் ஆலயத்தில் இரவு தங்கி ஓய்வெடுக்கவுள்ளனர்.
நாளை (05) காலை டிக்கோயாவிலிருந்து மீண்டும் தங்களது யாத்திரையைத் தொடரவுள்ள பக்தர்கள், ரதல்ல பகுதியைச் சென்றடைந்து அங்குள்ள ஆலயத்தில் தங்குவதற்குத் திட்டமிட்டுள்ளனர்.
இலங்கையின் பல்சமய நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், கதிர்காமம் வரையிலான இந்த நீண்ட நெடும்பயணத்தில் வழியமைந்துள்ள பல்வேறு இந்து ஆலயங்கள் மற்றும் பௌத்த விகாரைகளில் தங்கி ஓய்வெடுத்தபடி தங்களது புனித யாத்திரையை அவர்கள் தொடரவுள்ளனர்.
எதிர்வரும் கதிர்காம ஆடிவேல் விழாவை முன்னிட்டு இந்த பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










