இலங்கையில் ஆண்டுதோறும் 19 வயதுக்குட்பட்ட சுமார் 900 முதல் 1,000 குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்படுவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் (NCCP) சமூக மருத்துவ நிபுணர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.
தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்துடன் இணைந்து, இன்று (9) சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினரிடையே பொதுவாக கண்டறியப்படும் புற்றுநோய் வகைகளாக லுகேமியா (Leukemia), லிம்போமா (Lymphoma), மூளைக் கட்டிகள், எலும்புப் புற்றுநோய் மற்றும் கண் புற்றுநோய் ஆகியவை காணப்படுவதாக டாக்டர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.
எனினும், புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு, உரிய சிகிச்சை வழங்கப்பட்டால் அதனை வெற்றிகரமாக சிகிச்சையளிப்பதற்கான வாய்ப்பு மிகவும் அதிகம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினரை பாதிக்கும் புற்றுநோய்கள், அவற்றின் அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், செப்டம்பர் மாதம் உலகளவில் குழந்தைப் பருவ புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது.
