உலக அரங்கில் இலங்கைக்கு WHO விசேட பாராட்டு! மலேரியா உள்ளிட்ட நோய் ஒழிப்பில் 10 ஆண்டு சாதனை

மலேரியா இல்லாத நாடு என்ற நிலையை தொடர்ந்து 10 ஆண்டுகளாக தக்கவைத்ததற்கும், தாய் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளில் ஏற்படும் டெட்டனஸ் நோயை ஒழித்த நிலையை ஒரு தசாப்தமாக பேணியதற்கும் இலங்கைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) விசேட பாராட்டுச் சான்றிதழை வழங்கியுள்ளது.

திமோர்-லெஸ்டேயின் (Timor-Leste) டிலியில் (Dili) நடைபெற்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியக் குழுவின் 79ஆவது அமர்வின்போது, WHO பணிப்பாளர் நாயகம் கலாநிதி டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் (Dr. Tedros Adhanom Ghebreyesus), சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் இந்த விசேட பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.

இலங்கை 2016ஆம் ஆண்டு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் மலேரியா இல்லாத நாடாக உத்தியோகபூர்வமாக சான்றளிக்கப்பட்டது. அதன் பின்னர் மலேரியா மீண்டும் நாட்டிற்குள் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து, கடந்த 10 ஆண்டுகளாக அந்த நிலையை இலங்கை தக்கவைத்துள்ளது.

மாலைதீவுகளுக்கு அடுத்ததாக, தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் மலேரியாவை ஒழித்த இரண்டாவது நாடாக இலங்கை அமைந்ததாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, தாய்மார் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் டெட்டனஸ் நோயை ஒழித்த நிலையும் கடந்த ஒரு தசாப்தமாக இலங்கையில் தொடர்ந்து பேணப்பட்டு வருகிறது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு நாடளாவிய ரீதியில் தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் டெட்டனஸ் தடுப்பூசி திட்டம், இந்த சாதனையை தக்கவைத்துக் கொள்ள முக்கிய பங்காற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வலுவான ஆரம்ப சுகாதார பராமரிப்பு கட்டமைப்பு, தேசிய அளவிலான அர்ப்பணிப்பு, அதிக தடுப்பூசி வழங்கல் வீதம் மற்றும் நோய் கண்காணிப்பு – கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவையே இந்த நீடித்த வெற்றிக்கு காரணம் என WHO பாராட்டியுள்ளது.

இந்த சாதனைகள் இலங்கை மக்களின் சுகாதாரத்தை பாதுகாப்பதுடன், எதிர்கால தலைமுறைகளுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் பங்களிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles