பதுளை மாவட்டத்தில் ஆபத்துக்கு உள்ளாகும் சிறுவர்களை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் திட்டம் நேற்று (25) பதுளை மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
ஊவா மாகாண சிறுவர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், குழந்தைகள் மீதான துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும்.
“நீங்கள் விழிப்புடன் உள்ளீர்களா?” என்ற கருப்பொருளில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்டிக்கர்களில், வட்சப் அவசர அழைப்பு இலக்கமான 071 333 1919 மற்றும் ஊவா மாகாண சிறுவர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு திணைக்களத்தின் இணையதள தகவல் பக்கத்துக்குச் செல்லும் QR குறியீடும் இடம்பெற்றுள்ளன.
மாகாண சிறுவர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு திணைக்களத்தின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், பதுளை பொலிஸ் அத்தியட்சகர் திரிக்க்ஷன எதிரிசூரிய, மாகாண போக்குவரத்து சேவை அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பசறை நிருபர்
