நேட்டோ நாடுகள் தொடர்பில் தான் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மன்னிப்பு கோர வேண்டும் என இங்கிலாந்து பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
டென்மார்க் நாட்டின் அங்கமாக உள்ள கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றவில்லையென்றால் சீனா, ரஷ்யா கைப்பற்றிவிடும் எனவும் அவர் கூறி வருகிறார்.
மேலும், இந்த நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கவில்லையென்றால் கூடுதல் வரிவிதிப்பேன் என்று ஐரோப்பிய நாடுகளை டிரம்ப் மிரட்டி வருகிறார்.
டிரம்ப்பின் பேச்சுக்கு ஐரோப்பிய யூனியனில் இடம்பெற்றுள்ள நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதற்கிடையில் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக வர்த்தக மன்ற மாநாட்டில் உரையாற்றி டிரம்ப், நேட்டோ அமைப்பில் அமெரிக்காவை தவிர பிறநாடுகளின் படைகள் முக்கிய பங்காற்றவில்லை என குறிப்பிட்டார்.
மேலும், ஆப்கானிஸ்தான் போரில் முன்களத்தில் அமெரிக்க படையினரே இருந்தனர், பிற நாடுகளின் படையினர் முன்களத்தில் இல்லை என்று கூறினார்.
நேட்டோ அமைப்பில் பிற நாடுகளை அமெரிக்கா சார்ந்திருக்கவில்லை. அவர்கள் எமக்கு தேவையுமில்லை. ஆப்கானிஸ்தானுக்கு படைகளை அனுப்பினோம் என்று அவர்கள் கூறுவார்கள். அவர்கள் அனுப்பினார்கள்…
ஆனால், அவர்களின் படைகள் போர் களத்தில் முன்களத்தில் இல்லை. அமெரிக்க படையினரே முன்களத்தில் இருந்தனர்’ என்று டிரம்ப் குறிப்பிட்டார்.
இந்நிலையில், டொனால்ட் டிரம்ப்பின் பேச்சு நேட்டோ மட்டுமின்றி தங்கள் நாட்டையும் அவமதிப்பதாக உள்ளதாகவும், இதற்கு டிரம்ப் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பிரிட்டனர் பிரதமர் கீர் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை கடந்த 2001ம் ஆண்டு போர் தொடுத்தது. இந்த போரில் நேட்டோ அமைப்பில் இருந்த பல்வேறு நாடுகள் பங்கேற்றன.
இங்கிலாந்து ராணுவ வீரர்கள் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் ஆப்கானிஸ்தான் போரில் பங்கேற்றனர். இந்த போரில் இங்கிலாந்து ராணுவ வீரர்கள் 457 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
