ஹட்டன் தனியார் பேருந்து நிலையத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றை உடைத்து, பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 06ஆம் திகதி இரவு சுமார் 11 மணியளவில் இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த வர்த்தக நிலையத்தின் கதவில் பொருத்தப்பட்டிருந்த இரண்டு பூட்டுகளையும் உடைப்பதற்கு சந்தேகநபர் சுமார் ஒரு மணித்தியாலம் செலவிட்டுள்ளதுடன், பின்னர் கடைக்குள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 28 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கையடக்கத் தொலைபேசியொன்றையும் திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மறுநாள் வர்த்தக நிலையத்திற்கு வந்த உரிமையாளர், கடையின் கதவு திறந்த நிலையில் இருப்பதை அவதானித்ததைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில், திருட்டுச் சம்பவம் இடம்பெறும் விதம் குறித்த வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமராக்களில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.
CCTV காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஹட்டன் பொலிஸார், சந்தேகநபரை அடையாளம் கண்டு கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது ஹட்டன் பொலிஸாருக்கோ தகவல் வழங்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
