நுகர்வோர் அதிகார சபையின் பதுளை மாவட்ட அலுவலகம் இவ்வாண்டின் முதல் ஏழரை மாதங்களில் மாவட்டம் முழுவதும் மேற்கொண்ட 298 திடீர் சோதனைகளின் அடிப்படையில், 1 கோடியே 5 லட்சம் ரூபா அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட மூத்த விசாரணை அதிகாரி அமில ரத்நாயக்க தெரிவித்தார்.
பதுளை, பண்டாரவளை, மஹியங்கனை, பசறை மற்றும் வெலிமடை நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் குற்றத்தை ஒப்புக்கொண்ட வர்த்தகர்களுக்கு இந்த அபராதங்கள் விதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
அதிகபட்ச சில்லறை விலையை விட , அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல், பொருட்களில் அவசியமான தகவல் குறிப்புகள் இன்றி விற்பனை செய்தல், காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்தல், விலைப்பட்டியலைக் காட்சிப்படுத்தாமல் பொருட்களை விற்பனை செய்தல், கையிருப்பில் இருந்தும் விற்பனை செய்ய மறுத்தல் உள்ளிட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பதுளை மாவட்டச் செயலாளர் சுனில் கலகம வழங்கிய ஆலோசனையின் பேரில், மூத்த விசாரணை அதிகாரி அமில ரத்நாயக்க தலைமையில் விசாரணை அதிகாரிகளான ஏ.எம்.ஏ.பி. திஸாநாயக்க, ஈ.எம்.கே.பி. ஏக்கநாயக்க, ஆர்.எம்.என்.எம். குணரத்ன மற்றும் ஏ. ரிஸ்வான் ஆகியோர் இந்த திடீர் சோதனைகளை முன்னெடுத்து, குற்றம் புரிந்த வர்த்தகர்களை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
த.டிமேஷன்










