மத்திய அதிவேக நெடுஞ்சாலை குறித்து ஆராய்வு

கிராமிய வீதி அபிவிருத்தியின் போது மாவட்டக் குழுக் கூட்டங்களில் சமர்ப்பிக்கப்படும் அவசர மக்கள் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து அப்பணிகளை நடைமுறைப்படுத்துமாறும், பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக 2022 ஆம் ஆண்டில் இடைநிறுத்தப்பட்ட அனைத்து வீதி அபிவிருத்தித் திட்டங்களையும் மீள ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நெடுஞ்சாலைகள் அமைச்சின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (11) நடைபெற்ற நெடுஞ்சாலைகள் அமைச்சு மூலம் 2026 ஆம் ஆண்டில் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

அனைத்து வீதி அபிவிருத்திப் பணிகளையும் உரிய காலத்தில் நிறைவு செய்து பொதுமக்களுக்கு செயற்திறனான போக்குவரத்து கட்டமைப்பை வழங்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இங்கு மேலும் வலியுறுத்தினார்.

நெடுஞ்சாலைகள் அமைச்சுக்காக 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திலும் டித்வா அனர்த்த நிலைமையின் கீழ் ஒதுக்கப்பட்ட 402 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழும் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டமிடல்கள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டன.

மத்திய அதிவேகப் பாதையின் 4 ஆம் கட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்டுள்ள குருநாகல் – கலேவெல மற்றும் ருவன்புர அதிவேகப் பாதையின் திட்டமிடல்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், மத்திய அதிவேகப் பாதையின் கடவத்தை – மீரிகம வரையிலான பகுதி மற்றும் துறைமுக நுழைவுச் சாலையின் நிர்மாணப் பணிகள், மத்திய அதிவேகப் பாதையின் 3 ஆம் கட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பொத்துஹெர – கலகெதர வரையிலான பகுதி உள்ளிட்ட அதிவேகப் பாதை நிர்மாணத் திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் முன்னேற்றம் குறித்தும் இங்கு விரிவாக மீளாய்வு செய்யப்பட்டன.

அதிவேகப் பாதை கட்டமைப்பின் நுழைவு மற்றும் இடைமாறல் தொடர்புகள் குறித்து எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு வழங்கக்கூடிய தீர்வுகள் குறித்தும், குருநாகல் – கலேவெல வீதி நிர்மாணத்தின் போது நட்டஈடு வழங்கும் செயற்பாட்டுடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

பேஸ்லைன் வீதியை கிருலப்பனை சந்தியிலிருந்து கொழும்பு – ஹொரணை வரை நீடிக்கும் திட்டம் மற்றும் பதுளை – செங்கலடி வீதியின் அம்பாறை – உஹனை வரையிலான பகுதியின் அபிவிருத்திப் பணிகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளைப் பராமரிக்கும் வேலைத்திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், வீதிகள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புனரமைக்க வேண்டுமெனினும், பல வீதிகள் 15 ஆண்டுகளுக்கு மேலாக புனரமைக்கப்படாத காரணத்தினால் அவற்றை புனர்நிரமாணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர். அவ்வாறு கடந்த 15 ஆண்டுகளில் எந்தவிதமான புனரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படாத 130 வீதிகள் (A மற்றும் B) உள்ளன என்றும் இதன்போது தெரியவந்தது.

நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் பாலங்கள் மற்றும் மேம்பாலங்கள் நிர்மாணத் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றமும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டதுடன், டித்வா அனர்த்த நிலையைக் கருத்திற்கொண்டு பதுளை – பிபிலை வீதியில் ஏற்பட்டுள்ள நிலைமையை முகாமைத்துவம் செய்து, அவ்வீதியின் அபிவிருத்திப் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் செயற்படுத்தப்படும் போக்குவரத்து தொடர்புகள் மற்றும் சொத்து முகாமைத்துவத் திட்டம், வீதிகள் மற்றும் நகர் பகுதிகளில் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கும், தற்போதுள்ள தரவு கட்டமைப்பை நவீனமயப்படுத்துவதற்கும் செயற்படுத்தப்படும் National Traffic Database திட்டம் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இத்திட்டம் பொலிஸ், வீதிப் பாதுகாப்புப் பிரிவுகள் மற்றும் வீதி முகாமைத்துவப் பிரிவுகள் ஒன்றிணைந்த ஸ்மார்ட் வீதி சமிக்ஞை மற்றும் கேமரா தொகுதியாக எதிர்வரும் சில ஆண்டுகளில் மேம்படுத்தப்படவுள்ளதுடன், வீதி நெரிசலைக் கட்டுப்படுத்துவதும் ஒழுக்க நெறிமிக்க வீதிப் பண்பாட்டை உருவாக்குவதுமே இதன் நோக்கங்களாகும்.

தற்போது செயற்படுத்தப்பட்டு வரும் கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் முன்வைக்கப்படும் பொதுமக்கள் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து அந்த அபிவிருத்திப் பணிகளை செயற்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

மேலும், கிராமிய வீதி அபிவிருத்தி தொடர்பில் மாவட்ட குழுக் கூட்டங்களில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் செயற்படுத்தப்பட்டதன் முன்னேற்றத்தையும் ஜனாதிபதி இதன்போது கேட்டறிந்தார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் செயற்படுத்தப்படும் வீதி அபிவிருத்தித் திட்டங்களை மாவட்ட மட்டத்தில் முறையாக நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதன் முக்கியத்துவம் மற்றும் சிறிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் பொறுப்பினை கட்டம் கட்டமாக மாவட்டச் செயலாளர்களிடம் கையளிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, நகர அபிவிருத்திப் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமானாயக்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும,
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் ஆசிரி கருணாவர்தன ஆகியோருடன், நிதி அமைச்சு மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles