அரசுக்குச் சரிந்த மக்கள் ஆதரவு: வீழ்ச்சியடையும் பொருளாதார நம்பிக்கை – மக்கள் மனநிலை மாறுகிறதா? அதிரடி ஆய்வறிக்கை!
இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்த மக்களின் கவலை அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் ஆதரவு தேர்தலுக்குப் பின்னர் பதிவான 65 சதவீதத்திலிருந்து தற்போது சுமார் 50 சதவீதமாக குறைந்துள்ளதாக Verité Research நிறுவனத்தின் அண்மைய ‘தேசத்தின் மனநிலை’ (Mood of the Nation) கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
2026 ஜூலை மாதத்தில் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக்கணிப்பில் அரசாங்கத்தின் மீதான ஆதரவு 49.83 சதவீதமாக பதிவாகியுள்ளது. இது கடந்த பெப்ரவரி மாதத்தில் பதிவான 65 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகும்.
இதேவேளை, நாட்டின் பொருளாதாரம் குறித்த மக்களின் பார்வையிலும் கணிசமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. பொருளாதார நிலைமை ‘மேம்பட்டு வருகிறது’ என்று நம்புவோரின் எண்ணிக்கை, முந்தைய கருத்துக்கணிப்பில் பதிவான 64 சதவீதத்திலிருந்து 41.63 சதவீதமாக குறைந்துள்ளது.
மறுபுறம், பொருளாதாரம் ‘மோசமடைந்து வருகிறது’ எனக் கருதுவோரின் எண்ணிக்கை முன்னர் சுமார் 15 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 40.29 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 55.59 சதவீதமானோர் தற்போதைய பொருளாதார நிலையை ‘மோசமானது’ என மதிப்பிட்டுள்ளனர். 38 சதவீதமானோர் மட்டுமே பொருளாதார நிலை ‘நல்லது’ அல்லது ‘மிகச் சிறந்தது’ எனக் கூறியுள்ளனர்.
பொருளாதாரம் தொடர்பான மக்களின் மனநிலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், Verité Research நிறுவனத்தின் பொருளாதார நம்பிக்கைச் சுட்டெண்ணையும் (Economic Confidence Index) எதிர்மறை நிலைக்கு (negative territory) தள்ளியுள்ளது. அண்மைய கருத்துக்கணிப்பில் இந்தச் சுட்டெண் -8 ஆக பதிவாகியுள்ளது. 2024 நடுப்பகுதியில் இது -39 ஆக இருந்த நிலையில், 2025 பெப்ரவரி மாதத்திற்குப் பின்னர் நேர்மறை நிலைக்கு (positive territory) வந்திருந்தது.
அதேவேளை, அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஏற்காதவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 31.40 சதவீதமானோர் தற்போதைய அரசாங்கம் செயற்படும் விதத்தை தாங்கள் ஏற்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
‘தேசத்தின் மனநிலை’ (Mood of the Nation) கருத்துக்கணிப்பு ஜூலை 11 முதல் 30ஆம் திகதி வரை நாடு முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பல கட்ட சீரற்ற மாதிரி முறையில் தெரிவுசெய்யப்பட்ட 2,013 வயது வந்தவர்களிடம் நடத்தப்பட்டது.
Vanguard Survey Pvt Ltd நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த ஆய்வின் துல்லியம் 95% நம்பிக்கை மட்டத்தில் ±2.21% பிழை எல்லைக்கு (error margin) உட்பட்டதாகும்.










