ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் – சூத்திரதாரிகளை தப்பவிடாமல் பின்னப்படும் சட்ட வலை

கட்டுரையாளர் – சதீஸ் செல்வராஜ்
நன்றி – தினகரன்

மிகக் கொடிய ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் ஏழு வருடங்கள் பூர்த்தியாகிறது. உயிரிழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகவிருக்கிறது. கடந்த ஆட்சிக் காலம் வரையில் இத்தாக்குதலுடன் தொடர்புபட்ட சூத்திரதாரி பற்றிய உறுதியான விடயங்கள் எதுவும் வெளிகொணரப்பட்டிருக்கவில்லை. மாறாக, விசாரணைகளை குழப்புகின்ற, சாட்சியங்களை அழிக்கின்ற நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் குண்டுகள் வெடித்து, இரண்டு நாட்களில் ஊடகங்களுக்கு முன்னால் தோன்றிய கோட்டாபய ராஜபக்ஸ, “இந்நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போகிறேன்.” என்று முழங்கினார்.

அதையடுத்து, “இஸ்லாமிய பயங்கரவாதம்” என்ற விடயத்தை தனித்து தூக்கிப்பிடித்து, ஒட்டுமொத்த இலங்கைவாழ் முஸ்லிம்களையும் தேர்தல் பழிகடாவாக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுது.

அதுவரையில் ராஜபக்ஸர்களின் மொட்டுக் கட்சிப் பாசறையால் கட்டியெழுப்பப்பட்டுவந்த முஸ்லிம் எதிர்ப்பு அரசியல் ஈஸ்டர் தாக்குதலின்போது உச்சம் கண்டிருந்தது. ஏதோவொரு வகையில், இந்த தாக்குதல் அரசியலுடன் தொடர்புபட்டிருப்பதுடன், ராஜபக்ஸர்கள் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் காரணமாக அமைந்திருந்தது.

ஏனென்றால், தம்மை வீழ்த்தவே முடியாது என்ற ஆணவத்தில் அடாவடி அரசியல் புரிந்து வந்த ராஜபக்ஸர்களை நாட்டு மக்கள் 2015 ஜனவரி 08 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடித்து, மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கினர். ஆனால், மைத்திரி – ரணில் கூட்டாட்சி மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு பதிலாக, மக்கள் விரோத மற்றும் கேலிக்கூத்தான ஆட்சியையே முன்னெடுத்துச் சென்றது. ஒரு கட்டத்தில் ஜனாதிபதி மைத்திரியை நாட்டு மக்கள் கோமாளியாகக் கூட சித்தரித்தனர்.

அதுமட்டுமன்றி, மைத்திரபாலவுக்கும் ரணிலுக்கும் இடையில் தோன்றிய முரண்பாடுகள் காரணமாக நல்லாட்சி அரசாங்கம் உறுதியற்றதாக மாறியிருந்தது. இதன்போது, பசில் ராஜபக்ஸவின் தலையீட்டில் புதிதாக உருவாக்கியிருந்த மொட்டுக் கட்சியை வளர்த்தெடுப்பதற்காவும், இழந்த அதிகாரத்தை மீளப் பெறுவதற்காகவும் முஸ்லிம் விரோதபோக்கை ராஜபக்ஸ குழுவினர் அரசியல் பொறியாக கையாண்டனர்.

2018 இல் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் “மொட்டு” என்ற புதிய சின்னத்தில் ராஜபக்ஸர்களின் குடும்பக் கட்சி முதன்முதலில் போட்டியிட்டது. மைத்திரியும் ரணிலும் பிறிந்து நின்று தனித்தனியே தமது வேட்பாளர்களை போட்டியில் இறக்கியிருந்தனர்.

நல்லாட்சி அரசாங்கத்தின் மீதிருந்த வெறுப்பினாலும், சிங்கள பேரினவாதமும் ராஜபக்ஸவாதமும் உயிர்ப்பெற்றதாலும் மொட்டுக் கட்சி 40.54 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றிபெற்றது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக்குவோம் எனும் பிரச்சாரம் மொட்டுக் கட்சித் தொண்டர்களால் பரப்பப்பட்டது. இலங்கையின் தேர்தல் சட்டத்திற்கு அமைய அது சாத்தியமற்றது என்றாலும், மொட்டுக் கட்சியின் இலக்கு இருக்கின்ற அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு கூடிய சீக்கிரத்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதாகவிருந்தது.

அதனொரு கட்டமாகத்தான், இலங்கை அரசியல் வரலாற்றில் மிக மோசமான “2018 ஒக்டோபர் சூழ்ச்சி” அரங்கேற்றப்பட்டது. அதாவது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக, மக்கள் ஆணையில் நிறுவப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கவை தூக்கியெறிந்துவிட்டு, மைத்திரியும் மஹிந்தவும் சேர்ந்து புதிய அரசாங்கத்தை அமைத்தனர்.

மைத்திரி ஜனாதிபதி இருக்கையில் அமர்ந்துகொண்டு, பாராளுமன்றத்தை கலைத்து, பிரதமர் இருக்கையை மஹிந்தவிடம் கொடுத்து, புதிய அமைச்சரவையை நியமித்திருந்தார். ஆனால், இக்கூட்டுச் சதியை ஜனநாயக சக்திகள் முறியடித்தனர். 52 நாட்களில் சட்டவிரோத அரசாங்கம் துடைத்தெறியப்பட்டது.

இவ்வாறு மைத்திரி – மஹிந்த அரசாங்கம் நிறுவுதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் நாமல் குமார என்பவர் மைத்திரபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோரை கொலை செய்வதற்கு இந்தியாவின் “றோ” சதி செய்வதாக தெரிவித்திருந்தார். அதையடுத்து, பயங்கரவாத விசாரணை பிரிவின் (TID) பிரதானியாக செயற்பட்ட நிசாந்த டி சில்வாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியில் இருந்து நீக்கினர். பிற்காலத்தில் தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து நிசாந்த டி சில்வா வெளிநாட்டில் தஞ்சமடைந்துவிட்டார்.

நாமல் குமார இனநல்லினக்கத்தை சீர்குழைக்கும் வகையில் சமூகத்தில் செயற்பட்டு வந்தவராவார். இவர் ராஜபக்ஸர்களின் நெருங்கிய ஆதரவாளருமாவார். விமானப் படையில் பயிற்சிப் பெற்று பணிபுரிந்துமுள்ளார். ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ஹெட்டிபொல பிரதேசத்தில் இடம்பெற்ற கலக சம்பவம் தொடர்பாக நாமல் குமார கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அதுபோல, கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பரவிய குரல் பதிவு தொடர்பாகவும் கடந்த வருடம் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

நிசாந்த டி சில்வா பதவி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தலைமை வகித்த பிரிவு முழுமையாக குழம்பிப் போனது. சிஸ்டம் அழிந்துபோனது. அச்சம்பவம் இடம்பெற்று சரியாக 5 மாதங்களில் ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றது. மாவனெல்ல பகுதியில் புத்தர் சிலை உடைக்கப்பட்டபோது, நீதிமன்றின் அனுமதியுடன் சஹ்ரானை கைது செய்வதற்கு பயங்கரவாத விசாரணை பிரிவு நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாதம் பெரும் பூதமாக கிளம்பியது. ராஜபக்ஸரின் தலைமைத்துவத்தின் கீழ் சிங்கள பேரினவாதம் விஸ்வரூபம் எடுத்தது. இன்று திசைகாட்டி அரசாங்கத்திற்கு எதிராக வதந்திகளை பரப்பிவரும் பிரதான தனியார் ஊடகங்கள் சில அன்று இனவாதத்திற்கு தூபமிட்டன. ராஜபக்ஸ பாசறையை பலப்படுத்தின.

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலின் பின்னர் மைத்திரிபால சிறிசேனவினால் மூவரடங்கிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அதில், உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட, முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இளங்ககோன் மற்றும் முன்னாள் அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன ஆகியோர் இருந்தனர். இந்த ஆணைக்குழு முழுமையான அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை. அறிக்கையை தயாரிப்பதற்கான ஆணைக்குழுவாகவே நியமிக்கப்பட்டிருந்தது. நிலக்கரி விவகாரம் தொடர்பாக தற்போது ஜனாதிபதி அநுரவால் நியமிக்கப்பட்டிருக்கின்ற ஆணைக்குழு முழு அதிகாரத்தையும் கொண்டுள்ளமை கவனிக்கத்தக்கது.

ஈஸ்டர் தாக்குதல் பற்றிய முதலாவது ஆணைக்குழு அறிக்கையில் பல விடயங்கள் வெளிக்கொண்டுவரப்பட்டன. அதுபோல, பாராளுமன்றத்திலும் இதுகுறித்த தெரிவுக்குழு நியமிக்கப்பட்டிருந்தது. சரத் பொன்சேக்கா, டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருந்தார்கள்.

அத்தோடு, குற்றப் புலனாய்வு திணைக்களமும் தமது விசாரணையை முடுக்கிவிட்டிருந்தது. இதன் பிரதானியாக ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டிருந்தார்.

ஆனால், 2019 ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் எல்லாம் தலைகீழாக மாறிப்போனது. கோட்டபாய அமோக வெற்றிப் பெற்றப் பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் 700 பேருக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டது. இது அரசியல் பழிவாங்கல் ஆகும். அதுவரையில், முன்னேற்றம் கண்டு வந்த ஈஸ்டர் தாக்குதல் பற்றிய விசாரணை முடங்கிப்போனது.

நடப்பு ஆட்சியில் ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் விவகாரத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் சலேவை, 2019 டிசம்பரில் ராஜபக்ஸ அரசாங்கம் அரச புலனாய்வு சேவையின் (SIS) பிரதானியாக நியமித்தது. தாக்குதல் நடந்தபோது நிலந்த ஜயவர்த்தன பிரதானியாக செயற்பட்டிருந்தார்.

கடந்த ஆட்சிக்காலம் வரையில் முறையாக ஈஸ்டர் தாக்குதல் பற்றிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அன்றைய ஆட்சியாளர்கள் நிறைவேற்றியிருக்கவில்லை. ஏதோவொரு வகையில் சாட்சிகள் அழிந்துபோக இடம்விடப்பட்டிருந்தது. ஆனால், தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சுரேஸ் சலே போன்ற மிக முக்கிய பதவிகளில் இருந்த பெரும் புள்ளிகள் பாரபட்சமின்றி கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். கடந்த காலத்தைப் போன்று வழக்கு விசாரணையை இழுத்தடிக்காது, தனிநீதிமன்ற தொகுதியை நிறுவி தினந்தோறும் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நீதிமன்றத்தைதான் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் காட்டு நீதிமன்றம் என்று சாடியிருந்தார்.

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலுக்கு சஹ்ரான் கும்பலின் இஸ்லாம் தனிமத பயங்கரவாத சிந்தனை காரணம் என்பது போலவே, அரசியல் தலையீடு இருப்பதும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. அரசியல் தலையீட்டை மூடி மறைப்பதற்கு ஒரு சில தரப்பினர் பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றமை வெள்ளிடை மலை. குறிப்பாக, ரொஹான் குணரத்ன மற்றும் பிள்ளையான் எழுதிய ஈஸ்டர் தாக்குதல் பற்றிய நூல்களின் சாராம்சம் அரசியல் குற்றவாளிகளை விடுவிப்பதாய் அமைந்திருக்கிறது. அதுபோல, உதய கம்பன்பிலவினால் எழுதி வெளியிடப்பட்ட, “சூத்திரதாரியை தேடிச்செல்லல்?” என்ற நூலிலும் அரசியல் குற்றவாளிகள் மறைக்கப்பட்டிருக்கின்றனர். மாறாக, இவர்கள் அனைவரும் சஹ்ரான் கும்பலின் மீதும் இஸ்லாம் மதபயங்கரவாதம் என்றும் மாத்திரம் சாராம்சத்தை சுருக்கியிருக்கின்றனர்.

கம்பன்பிலவின் நூல் வெளியீட்டில் கோட்டாபய ராஜபக்ஸ, மஹிந்த ராஜபக்ஸ, விமல் வீரவன்ச, சரத் வீரசேகர, மைத்திரிபால சிறிசேன மற்றும் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டமை கூர்ந்து கவனிக்கத்தக்கது. இவர்களிடம் தான் கடந்த காலத்தில் மக்கள் ஈஸ்டர் தாக்குதலுக்கு நியாயத்தை வேண்டி நின்றனர்.

உதய கம்பன்பில கோட்டாபய அரசாங்கத்தில் வலுசக்தி அமைச்சராக இருந்ததோடு, எரிபொருள் நெருக்கடியின் போது அவரின் பதவி பறிக்கப்பட்டது. பிள்ளையான் கைது செய்யப்பட்டவுடன் முதலில் துடித்துப் போனதும் உதய கம்மன்பிலதான். வேகவேகமாக பிள்ளையானை பார்ப்பதற்குச் சென்றிருந்தார். பிள்ளையானை பார்ப்பதற்கு அனுமதி இல்லாததால் அவரது சட்டத்தரணியாக கம்மன்பில தோற்றியிருந்தார். அதுபோல, தற்போது சுரேஸ் சலேயின் சார்பிலும் கம்மன்பில தோற்றியிருக்கிறார்.

எதுஎவ்வாறாயினும், கடந்த ஆட்சியைக் காட்டிலும் திசைகாட்டி ஆட்சியில் விசாரணைகள் முறையாக நம்பக்கூடிய வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் காலதாமதம் ஏற்பட்டிருந்தாலும், இப்போது வேகமாக விசாரணைகள் நகர்கின்றன. ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டோரும், நாட்டு மக்களும் நீதியும் நியாயமும் இந்த ஆட்சியில் நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை கொண்டிருக்கின்றனர். பிரதான சூத்திரதாரியை அடையாளம் காண காத்திருக்கின்றனர்.

Related Articles

Latest Articles