பெருந்தோட்டக் காணிகளை தனியாருக்கு வழங்க முன் மலையக மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துக!

இலங்கையின் அரசாங்கத்துக்குச் சொந்தமான JEDB, SLSPC மற்றும் எல்கடுவை பெருந்தோட்ட நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்களின் கீழுள்ள பெருந்தோட்டக் காணிகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்நிலையில், குறித்த காணிகளைத் தனியாருக்கு வழங்குவதற்கு முன்னர், அங்கு வாழும் மக்களின் உரிமைகளையும் எதிர்கால வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், குறித்த மூன்று அரச நிறுவனங்களின் கீழுள்ள காணிகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற போதிலும், அங்கு வாழும் மக்களுடன் இதுவரை முறையான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.

குறித்த காணிகள் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்படும்போது, அங்கு வாழும் மக்களுக்கும் அவர்களின் பிரதிநிதிகளுக்கும் உரிய தகவல்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்த விடயம் தொடர்பில் மக்களுக்குத் தெளிவான விளக்கங்கள் வழங்கப்படவில்லை. மேலும், பெருந்தோட்ட மக்களுடன் இதுவரை உரிய கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை என அவர் தெரிவித்தார்.

உதாரணமாக, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஹட்டன் பிரகடனத்தில் இடம்பெற்ற விடயமொன்றையும் அவர் சுட்டிக்காட்டினார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னர் மக்களுக்குக் காணி வழங்குவது தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்த போதிலும், தற்போது அந்தக் காணிகள் பெருமளவில் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதாகவும், அங்கு வாழும் இளைஞர்களுக்கும் மக்களுக்கும் உரிய வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், குறித்த பெருந்தோட்டப் பகுதிகளில் சுமார் 7,422 தொழிலாளர்கள் பணியாற்றுவதாகவும், அவர்களில் சிலர் முறையான தொழிலாளர் பதிவுகளின்றி வேலை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், அப்பகுதிகளில் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளும் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.

JEDB மற்றும் எல்கடுவை பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களின் EPF, ETF பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதாக அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்தது. இதற்காக 4,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும், அதில் 1,300 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக அரசாங்கத்துக்கு முன்னர் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்திருந்ததாகக் குறிப்பிட்ட ஜீவன் தொண்டமான், தற்போது அந்த அறிவிப்புக்குப் பின்னால் குறித்த பெருந்தோட்டங்களின் காணிகளை முழுமையாகத் தனியார் தரப்பினருக்கு வழங்கும் நோக்கம் இருப்பதாகத் தெரியவந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், பெருந்தோட்டத்துறை அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

அரசாங்கத்தால் ஒரு பெருந்தோட்டத்தை நிர்வகிக்க முடியாத நிலை ஏற்பட்டால், அதனைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு வழங்குவதில் தவறில்லை. ஆனால், சுமார் மூன்று இலட்சம் ஏக்கர் காணிகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு வழங்க அரசாங்கத்தால் முடியும் என்றால், அதில் குறைந்தது 10 சதவீதக் காணிகளையாவது அங்கு தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் மக்களுக்கு வழங்க முடியும் என அவர் வலியுறுத்தினார்.

மலையக மக்கள் இன்று பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். பலருக்கு EPF, ETF உள்ளிட்ட தொழிலாளர் உரிமைகள் தொடர்பிலும் பிரச்சினைகள் காணப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில், பரம்பரை பரம்பரையாகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வாழ்ந்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகப் பங்களிப்புச் செய்த மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, பெருந்தோட்டக் காணிகளில் ஒரு பகுதியை அங்கு வாழும் மக்களுக்கு விவசாய நடவடிக்கைகளுக்காகவும் சுயதொழில் முயற்சிகளுக்காகவும் வழங்க முடியும். மக்களுக்கு வீடுகளை அமைப்பதற்கான காணிகளை வழங்குவது ஒரு விடயம். ஆனால், பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கும் விவசாயம் மற்றும் சுயதொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் காணிகளை வழங்குவது அதைவிட முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தரிசு நிலங்களை மக்களுக்கு வழங்குவதாக அரசாங்கம் கூறுவது நடைமுறையில் அவ்வளவு இலகுவான விடயமல்ல என்றும் அவர் தெரிவித்தார். தாமும் முன்னர் அமைச்சுப் பதவியில் இருந்த அனுபவத்தின் அடிப்படையில், பெருந்தோட்டக் காணிகளை முறையான குத்தகை மற்றும் நிர்வாக நடைமுறைகளுக்கு உட்படுத்தி மக்களுக்கு வழங்குவது சிக்கலான செயல்முறை என்பதைத் தாம் அறிந்திருப்பதாகவும் கூறினார்.

இந்த விடயத்தை அரசியலாக்குவதோ அல்லது அரசாங்கத்தை விமர்சிப்பதோ தனது நோக்கமல்ல எனக் குறிப்பிட்ட அவர், மலையக மக்களின் எதிர்காலத்துடன் தொடர்புடைய மிக முக்கியமான பிரச்சினையாக இதனைக் கருதுவதாகத் தெரிவித்தார்.

பெருந்தோட்டங்களில் காணப்படும் பங்களாக்கள், தொழிற்சாலைகள் மற்றும் ஏனைய வளங்களைத் தனித்தனியாக அடையாளப்படுத்தி, அவற்றைச் சுற்றுலாத்துறை மற்றும் தொழிற்துறை சார்ந்த தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான திட்டங்களை அரசாங்கத்தால் முன்னெடுக்க முடியும் என்றால், அங்கு வாழும் மக்களுக்கான காணிகளையும் அதேபோன்று தனியாக ஒதுக்கீடு செய்ய முடியும் என்றும் அவர் வாதிட்டார்.

மேலும், பெருந்தோட்ட நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கத்திடமும் தொழிற்சங்கங்களிடமும் கேள்விகளை எழுப்புவதற்கும், அவர்களிடம் பொறுப்புக்கூறலைக் கோருவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், காணிகள் முழுமையாகத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டால், அங்கு வாழும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேள்வி எழுப்புவதற்கும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குமான வாய்ப்புகள் குறைந்துவிடும் என அவர் எச்சரித்தார்.

குறிப்பாக, கொட்டகலை, ஹட்டன், பொகவந்தலாவை உள்ளிட்ட மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும், கண்டி, மாத்தளை, இரத்தினபுரி மற்றும் காலி போன்ற மாவட்டங்களிலும் தனியார் பெருந்தோட்டங்கள் காணப்படுகின்றன. இப்பகுதிகளில் வாழும் மக்கள் தங்களது அன்றாடத் தேவைகளுக்காகக்கூட சில சந்தர்ப்பங்களில் தோட்ட நிர்வாகங்களின் அனுமதியைப் பெற வேண்டிய நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஏற்கனவே பெருந்தோட்ட நிறுவனங்களுடன் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் மலையக மக்கள், எதிர்காலத்தில் தனியார் நிறுவனங்களுடன் மேலும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையை அரசாங்கம் உருவாக்கிவிடக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த விடயத்தை அரசாங்கத்தின் உயர்மட்டத்திற்கும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்டு செல்ல வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இது வெறுமனே ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி சார்ந்த அரசியல் பிரச்சினை அல்ல. இது மலையக மக்களின் அடையாளம், உரிமை மற்றும் எதிர்காலத்துடன் தொடர்புடைய விடயமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று ஒருவர் ஆளும் கட்சியிலும் மற்றொருவர் எதிர்க்கட்சியிலும் இருக்கலாம். எதிர்காலத்தில் அரசியல் நிலைப்பாடுகள் மாறலாம். ஆனால், இன்று எடுக்கப்படும் தீர்மானங்கள் எதிர்காலத் தலைமுறையினரையும் நீண்டகாலமாகப் பாதிக்கக்கூடியவை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இறுதியாக, JEDB, SLSPC மற்றும் எல்கடுவை பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழுள்ள காணிகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்தாலும், அதைவிடப் பெரிய தவறாக அமையக்கூடிய மற்றொரு நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக, 2042ஆம் ஆண்டில் முடிவடைய வேண்டிய ஒப்பந்தத்தைத் தனியார் தரப்பினருக்குச் சாதகமாக மேலும் நீடிக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் வலியுறுத்திய ஜீவன் தொண்டமான், அவ்வாறான தீர்மானம் மலையக மக்களின் எதிர்காலத்திற்குப் பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதுடன், எமது மக்களின் இருப்புக்கும் பாதகமாக அமையும் என எச்சரித்தார்.

மலையக மக்களின் காணி உரிமை, வாழ்வாதாரம் மற்றும் எதிர்காலத்தைப் பாதுகாத்த பின்னரே பெருந்தோட்டக் காணிகள் தொடர்பான எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்பதே தனது பிரதான கோரிக்கை என அவர் தனது உரையில் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles